"எனக்கும் 2 மகள்கள் இருக்கு".. இலவச ஆடுகளை அடம்பிடித்து வாங்கிய திமுக எம்பி ! சிரித்த துரை முருகன்
வேலூர்: வேலூர் மாவட்டம் நாகல் ஊராட்சி தலைவர் சார்பில் அவரது சொந்த செலவில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு ஆடு வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு சென்ற திமுக எம்பி கதிர் ஆனந்த், தனக்கும் 2 பெண் பிள்ளைகள் இருக்கிறது. எனக்கும் ஆடுகள் வேண்டும் எனக்கூறி 2 ஆடுகளை வாங்கி சென்றார். இதனை அருகே இருந்த அவரது தந்தையும் அமைச்சருமான துரைமுருகன் சிரித்தபடி வேடிக்கை பார்த்தார்.
திமுகவின் மூத்த தலைவர் துரை முருகன். இவர் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறா்ர. அதேபோல் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக துரை முருகன் இருந்து வருகிறார். அதேபோல் வேலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் எம்பியாக உள்ளார். தற்போது தந்தை துரை முருகன் - மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வேலூரில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் காட்பாடி குகையநெல்லூர் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையை இருவரும் திறந்து வைத்தனர். அதன்பிறகு இன்று வேலூர் மாவட்டம் கேவி குப்பம் மேற்கு ஒன்றியம் நாகல் ஊராட்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகனும், திமுக எம்பி கதிர் ஆனந்தும் பங்கேற்றனர்.
முதலில் நாகல் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை இருவரும் திறந்து வைத்தனர். அதன்பிறகு நாகல் ஊராட்சி தலைவர் பாலாசேட்டுவின் சொந்த செலவில் அந்த பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்களுக்கு ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எந்தெந்த வீடுகளில் பெண் குழந்தைகள் இருக்கிறார்களோ அவர்களுக்கு நாகல் ஊராட்சி தலைவர் பாலாசேட்டு சார்பில் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் ஆடுகள் வழங்கினர்.
இந்த வேளையில், மேடையில் இருந்த கதிர் ஆனந்த், ‛‛எனக்கும் ஆடுகள் வேண்டும். எனக்கும் 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்'' என கூறினார். இதையடுத்து மைக்கில் கதிர் ஆனந்த் எம்பிக்கும் 2 ஆடுகள் வழங்குகிறோம் எனக்கூறி அவருக்கும் 2 ஆடுகள் வழங்கப்பட்டது. இதனை அருகே இருந்த துரைமுருகன் சிரித்தபடி பார்த்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமைச்சர் துரைமுருகனின் மகனான வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்தின் மனைவி பெயர் சங்கீதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். செந்தாமரை, இலக்கியா என்ற 2 மகள்களும், இளவரசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தான் தனக்கும் 2 பெண் பிள்ளைகள் இருப்பதாக கூறி 2 ஆடுகளை நாகல் ஊராட்சி தலைவர் பாலாசேட்டுவிடம் இருந்து வாங்கி சென்றார் கதிர் ஆனந்த்.












Click it and Unblock the Notifications