"நீதிமன்றத்திற்கு இப்படி எல்லாம் வரக்கூடாது”.. திமுக எம்.பி கதிர் ஆனந்த்தை கண்டித்த நீதிபதி!
வேலூர்: தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த திமுக எம்.பி கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

பின்னர், தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்றது. அதில், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீதும் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வேலுார் தொகுதி எம்.பி கதிர் ஆனந்த், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, வேலுார் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜர் ஆனார்.
அப்போது, 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ அவர் வந்ததால், நீதிபதி அது குறித்து கேள்வி எழுப்பினார். "நீதிமன்றத்திற்கு இதுபோன்று கும்பல் சேர்த்துக் கொண்டு வரக்கூடாது" என கதிர் ஆனந்தை கண்டித்தார் நீதிபதி. பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி சக்திகுமார், இந்த வழக்கில் கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications