வாணியம்பாடியில் மஜக பிரமுகர் தலை துண்டித்துக் கொடூர கொலை.. என்ன நடந்தது.. வெளியான பகீர் பின்னணி?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் சமூகநல ஆர்வலரான மஜக பிரமுகர் வசீம் அக்ரம் தொழுகை முடிந்து வீடு திரும்பிய போது, 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொன்று தலையை துண்டித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்ததால் படுகொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார்.
வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக செயல்பட்டு வந்த இவர் நேற்று மாலை 6.50 மணியளவில் தொழுகையை முடித்துவிட்டு கிளம்பி வந்து கொண்டிருந்தார்.

தலை துண்டிப்பு
வரும் வழியில் இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் அவரை துரத்தி வந்திருக்கிறார்கள். வசீம் அக்ரமை சாலையில் ஓட ஓட விரட்டிய அந்த கும்பல், பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து எடுத்து கொண்டு வந்த காரிலேயே புறப்பட்டு சென்றார்கள். படுகொலையை நிகழ்த்திய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை.

தனிப்படை அமைப்பு
இந்த சம்பவத்தால் வாணியம்பாடி நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், சடலத்தை கைப்பற்றி வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல்அறிந்து வந்த
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி விசாரணையை தொடங்கினார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

நேரில் வந்த டிஐஜி
இதனிடையே வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் வாணியம்பாடி நகர பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டடது. இதனால் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். வாணியம்பாடி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி பாபு மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் (பொறுப்பு) ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா விற்பனை
விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஷ், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்திருக்கிறார். இதனை சமூக ஆர்வலரான வசீம் அக்ரம், காவல் துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். தங்களை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரத்தில் இருந்த இம்தியாஷ் கூலிப்படையை வைத்து வசீம் அக்ரமை கொலை செய்துள்ளார்.

கடும் கண்டனம்
இதனிடையே மனிதநேய ஜனநாயக கட்சி இந்த கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

போலீசுக்கு கோரிக்கை
அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர்.மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். நேற்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications