வேலூரில் கணவனின் முட்டாள்தனமான ஐடியா.. கொட்டிய பணம்.. கடைசியில் மனைவிக்கு நடந்த ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஆந்திர எல்லையில் உள்ள நகரம் ஆகும். கூப்பிடும் தூரத்தில் தான் ஆந்திரா இருக்கிறது. கர்நாடகா மாநிலமும் பக்கத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக சிலர் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தி வந்து விற்பது அவ்வப்போது நடக்கிறது. அந்த வகையில் பேரணாம்பட்டில் கர்நாடகா மது பாக்கெட்டுகள் விற்ற நர்சிங் மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கணவனின் முட்டாள்தனமான ஐடியாவால் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட மனைவி, வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்றுள்ளார். கணவன் மனைவி இருவரும் கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்றுள்ளனர். அவர்களை போலீசார் வீடு தேடி வந்து கண்டுபிடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தனுக்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது பிரபு தப்பியோடி விட்டார். விசாரணையில் பிரபுவும், அவரின் மனைவி ஜெயந்தி (வயது 32) என்பவரும் சேர்ந்து கர்நாடகா மதுபாக்கெட்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. பிரபு மீது ஏற்கனவே மதுபாட்டில்கள் பதுக்கி விற்க முயன்றது, ரேஷன் அரிசி கடத்தல் என பல வழக்குகள் இருந்தன.
பிரபுவின் மனைவி ஜெயந்தி பேரணாம்பட்டு பங்களாமேட்டில் உள்ளது ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாண்டு படித்து வருகிறார். அவர் போலீசாரை பார்த்ததும் அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு சென்று பதுங்கியிருக்கிறார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, தன்னுடைய பெயரை சொல்லாமல், தனது தாயார் பெயரான கிருஷ்ணவேணியின் பெயரை மாற்றி கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தனது கணவன் பிரபு கூறியபடி கர்நாடகா மது பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து அதிக லாபத்துக்கு விற்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து மாணவி ஜெயந்தியை தலைமை காவலர் சங்கீதா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கர்நாடக மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஜெயந்தியின் கணவன் பிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications