காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் தப்பி.. மகாராஷ்ராவில் சொந்த ஊர் போன பெண்.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி எம் ஜி ஆர் நகரை சேர்ந்த பூவேந்தன் என்பவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஆவார். இவர் தனது மனைவியுடன் பிரிந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு காத்திருந்த போது, 13 சவரன் தங்கம் அவரது பையில் இருந்து திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தனிப்படை அமைத்தனர். மகாராஷ்ரா வரை சென்ற தனிப்படை பூவேந்தனின் நகையை முழுவதுமாக மீட்டதுடன், திருடிய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
ரயிலில் ஏறும் போது சரி, இறங்கும் போதும் சரி, மிக கவனமாக இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் உங்களை நோட்டமிட்டு வந்து பணம், நகைகளை பறித்து செல்ல வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ரயிலில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்ற தவிப்பில் பயணிகள் இருப்பார்கள். அவர்களது கவனம் முழுவதும் ரயிலில் ஏறுவதில் இருக்கும். அந்த நேரத்தில் பயணிகளிடம் நகை அல்லது பணத்தை லாவகமாக திருடினால் கண்டுபிடிக்க முடியாது. அப்படியான சம்பவங்கள் பல முறை நடந்துள்ளது. அதேபோன்ற ஒரு சம்பவம் தான் வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 66 வயது பூவேந்தன், தனது மனைவியுடன் செப்டம்பர் 26ம் தேதி, தனது முக்கியமான உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு செல்லத் திட்டமிட்டிருந்தார். காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த புவேந்தன், பிரிந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு சற்று முன்பு, தான் கொண்டு வந்த கைப்பையைச் சோதித்தபோது பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அதில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.இதை கண்டு பூவேந்தன் மனம் நொறுங்கிப் போனார். இத்தனை ஆண்டுகால உழைப்பில் சேர்த்த நகைகள் நொடிப்பொழுதில் பறிகொடுத்ததால் நொந்து போனார்.
உடனடியாக காட்பாடி ரயில்வே போலீஸில் அவர் கண்ணீருடன் புகார் அளித்தார். இதையடுத்து காட்பாடி ரயில்வே போலீசார், சற்றும் தாமதிக்காமல் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி திருட்டில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிந்தது.
திருடப்பட்ட நகைகளை மீட்கவும், திருடிய பெண்ணை பிடிக்கவும், உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு துரிதமாகச் சென்றனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, மகாராஷ்டிரா மாநிலம், ஜல்காணைச் சேர்ந்த 45 வயது துர்கா என்பவர் தான் நகையை திருடியவர் என்பதைக் கண்டறிந்தனர்.
மகாராஷ்டிரா வரை சென்று அந்தப் பெண்ணை அதிரடியாகக் கைது செய்த போலீசார், திருடிச் செல்லப்பட்ட 13 சவரன் தங்க நகைகள் அனைத்தையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட துர்கா காட்பாடிக்கு அழைத்து வந்து, வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பூவேந்தனிடம் நகையை மீண்டும் ஒப்படைத்தனர். இதையடுத்து பூவேந்தன் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications