தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. 9 காவலர்களிடம் விளக்கம் கேட்பு! டிஜிபி சைலேந்திர பாபு தகவல்
வேலூர்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையில் இடம்பெற்ற காவலர்கள் 9 பேரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட ஆணைத்தில் குறிப்பிட்ட காவலர்கள் சம்மதப்பட்ட 9 பேரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
குண்டர் சட்டம் போடப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 740 பேருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. 6 மாத காலத்தில் போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை மாற்றுவது எங்கள் நோக்கமாக உள்ளது.

கஞ்சா
இதை போதைக்கு எதிரான போராகத்தான் பார்க்கிறோம். போரை கொடுத்துள்ளோம். 2, 3 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இறுதிப் போரில் வெற்றி பெறுவதுதான் எங்கள் நோக்கம். ஆந்திராவை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளை அங்கேயே சென்று கைது செய்துள்ளோம் இதனால் வெகுவாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு
வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி காவல் நிலையம், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலையங்கள் கஞ்சா இல்லாத இல்லாத, முற்றிலும் ஒழிக்கப்பட்ட காவல் நிலையங்களாக உள்ளன. அவர்களுக்கு "போதை பொருள் இல்லா காவல் நிலையங்கள்" என பாராட்டியுள்ளோம்.

6 மாதத்தில்
காலப்போக்கில் தமிழகத்தில் உள்ள 1484 காவல் நிலையத்தையும் போதை பொருள் இல்லா காவல் நிலையங்களாக மாற்றுவோம். அடுத்த கட்டமாக போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற அதிகாரிகளுக்குள் போட்டி வைத்துள்ளோம். இன்னொரு 6 மாத காலத்தில் போதை பொருள் இல்லா தமிழகத்தை மாற்றுவது எங்கள் நோக்கமாக உள்ளது.

தீபாவளி பாதுகாப்பு
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் காவலர்கள் குற்ற சம்பவங்களை தடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க சீருடையிலும், சாதாரண உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். வாகன நெரிசல் பெரும் சவாலாக உள்ளது அதை சரி செய்யவும் இரவு முழுவதும் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பொது மக்கள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications