வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் தமிழக அரசு.. வேலூர் வீட்டு பணியாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
வேலூர்: தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனைத்து திட்ட பலன்களையும் பெற முடியும்.. இந்நிலையில் புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் பொருட்டு வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்று வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் தெரிவித்தார்.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமுக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒட்டுமொத்தமாக 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நலவாரியங்களில் பதிவு செய்துள்ள பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தே.ஞானவேல் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனைத்து திட்ட பலன்களையும் பெறலாம். தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட வீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களை உறுப்பினர்களாக https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு பெற்ற வீட்டு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, வீட்டு வசதித்திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உள்ளிட்டவற்றுக்கு நலத்திட்ட நிதியுதவித்தொகை தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் பொருட்டு வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே வீட்டு பணியில் ஈடுபடும் பணியாளர்கள், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட தொலைபேசி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம், புகைப்படம், நியமனதாரர் ஆவணம், பணிச்சான்று ஆகிய ஆவணங்களுடன் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications