பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
வேலுர்: வேலூரில் இன்று நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு பதிவு செய்தார். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த வாக்குப்பதிவு மாதிரி வடிவ நோட்டீசில், தனது சின்னம் மட்டும் (பலாப்பழம்) கருப்பாக உள்ளதே என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த அதிகாரிகளுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் மன்சூர் அலிகான். அதன்பிறகு படவாய்ப்புகள் இன்றி அவர் இருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‛லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகை திரிஷா தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. அந்த பிரச்சனைகளை கடந்து வந்த மன்சூர் அலிகான், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
வேலூர் சிட்டிங் எம்பியும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகான் களமிறங்கினார். மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
பிரசாரம் முடிந்த அன்று மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நலம் தேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தான் போட்டியிடும் வேலூர் தொகுதிக்கு மன்சூர் அலிகான் சென்றார். அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றிற்கு மன்சூர் அலிகான் சென்றார்.
அப்போது, வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய நோட்டீசை கவனித்தார். அதாவது, வாக்குச்சாவடிக்கு வெளியே போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகிய விவரங்களுடன் வாக்குப்பதிவு மாதிரி வடிவத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கும். வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்காக இந்த நோட்டீஸ் ஒட்டப்படுவது வழக்கம்.
இதை கவனித்த மன்சூர் அலிகான், தனது சின்னம் மட்டும் (பலாப்பழம்) கருப்பாக உள்ளது என்று சொல்லிக்கொண்டே வாக்குச்சாவடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மன்சூர் அலிகான் வாக்களித்துவிட்டு, வாக்களித்ததற்கான அடையாளமாக மை வைத்த விரலை காட்டியபடி வெளியே வந்தார். தொடர்ந்து அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications