ஆம்பூரில் 70 வயது கூலித்தொழிலாளிக்கு வந்த 1.5 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. பென்சஷனை நிறுத்திய அதிகாரிகள்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த 70 வயதான வேலாயுதம் என்ற முதியவர், கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். அவரது மனைவி உஷா, காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்ததால், அவரது மறைவுக்குப் பிறகு, மாதந்தோறும் வர வேண்டிய பி.எஃப். ஓய்வூதியத்தை வேலாயுதம் பெற்று வந்தார். அந்த ஓய்வூதியத்தை ரூ.1.5 கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி என்று கூறி அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், மளிகை தோப்புப் பகுதியைச் சேர்ந்த 70 வயதான வேலாயுதம் என்ற முதியவர், கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். அவரது மனைவி உஷா, காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்ததால், அவரது மறைவுக்குப் பிறகு, மாதந்தோறும் வர வேண்டிய பி.எஃப். ஓய்வூதியத்தை வேலாயுதம் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு ஓய்வூதியத் தொகை வரவில்லை. இதனால் குழப்பமடைந்த வேலாயுதம், நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரித்தபோது, ஊழியர்கள் அளித்த பதில் வேலாயுதத்தை நிலைகுலையச் செய்தது. "உங்கள் பெயரில் ₹1.5 கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி உள்ளதால், உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் அலைக்கழிப்பு
கூலித் தொழிலாளியான தனக்குப் பல கோடி ரூபாய் வரி பாக்கி எப்படி வந்தது என்று அதிர்ச்சியடைந்த வேலாயுதம், வேலூரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டார். அங்கிருந்த அதிகாரிகள், "உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் நகலைக் கொண்டு வாருங்கள்" என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
புகாரை பெற மறுப்பு
இதையடுத்து, வேலாயுதம் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் புகாரைப் பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது, மேலும் "இது பொருளாதாரக் குற்றப்பிரிவு அல்லது சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் வழக்கு" என்று கூறி, முதியவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்களாம்
கண்ணீருடன் கோரிக்கை
தன்னுடைய புகாரை எந்த அதிகாரிகளும் ஏற்க மறுத்து அலைக்கழித்து வருவதால், செய்வதறியாது தவிக்கும் வேலாயுதம், உரிய அதிகாரிகள் தலையிட்டுத் தன் கணக்கு மீதான தடையை நீக்குவதுடன், மனைவியின் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி மோசடிகள்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சமீப காலமாக இதுபோன்ற ஆவண மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கூலித் தொழிலாளிகளின் அடையாள ஆவணங்களைத் திருடி, அவர்களின் பெயர்களில் போலியான நிறுவனங்களைத் தொடங்கி, ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள், காவல்துறையினராலும் அதிகாரிகளாலும் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த ஆவண மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அதிகாரிகள் விரைந்து நீதி வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications