வேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்'.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களுக்கு கலெக்டர் குட்நியூஸ்
வேலூர்:'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்கள், சேவைகளை விளக்குவார்கள் என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி கூறியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களுக்கு நல்ல செய்தி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 211 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் முகாமை வருகிற 15-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தாலுகாவில் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் செப்டம்பர் மாதம் வரை முகாம்கள் நடைபெறும்.
இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் 71 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 140 முகாம்களும் என்று மொத்தம் 211 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளை சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். மேலும் ஆதார் சேவை மற்றும் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்கள், சேவைகளை விளக்கி கூறுவார்கள். மேலும் அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்குவார்கள்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட பெண்கள் இருந்தால் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று முதல் (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த பணி 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஊரக பகுதியில் 929 தன்னார்வலர்கள், நகர பகுதியில் 485 தன்னார்வலர்கள் என்று மொத்தம் 1,414 தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications