ஜாலியோ ஜாலி.. வேலூரில் 3வது கல்யாணத்துக்கு ரெடியான மாப்பிள்ளை.. கரெக்ட்டா வந்த 2வது மனைவி.. போச்சுடா
வேலூர்: தஞ்சாவூர் பெண் ஒருவர், குடியாத்தம் நபர் மீது தந்துள்ள புகார் ஒன்று பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்துள்ளார்.. அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

திருமணம்: "நான் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய கணவர் கடந்த 2021-ம் ஆண்டு இறந்துவிட்டார். பிறகு, நான் 2வது கல்யாணம் செய்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்தேன். அதனை பார்த்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, அவர் முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்டது என்றும், என்னை 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னார்.. இதையடுத்து, நாங்கள் 2 பேரும் ஓராண்டாக செல்போனில் வீடியோ காலில் பேசினோம். இந்தியா திரும்பிய என்னை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மைசூருக்கு அழைத்து சென்று ஓட்டலில் வைத்து, அவர் திருமணம் செய்து கொண்டார்.
விருப்பமில்லை: பிறகு சில நாட்களில், நான் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வருவேன். அப்போது அவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்லாமல் சென்னை, பெங்களூரு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து கேட்டதற்கு அவர் பெற்றோருக்கு, இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர் என்னுடைய செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. திடீரென என்னுடைய செல்போன் நம்பரையும் பிளாக் செய்து விட்டார். அதனால் கடந்த மாதம் குடியாத்தம் வந்து வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேச முயன்றேன். அவரை பார்க்க விடாமல் குடும்பத்தினர் தடுத்து விட்டார்கள்.
புகார்கள்: இப்போது 3-வதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறி, அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை எனது செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனால், அவருக்கு நடக்க இருக்கும் 3-வது திருமணத்தை தடுத்து நிறுத்தி என்னுடன் வாழ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்..
கணவரின் 3வது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று, 2வது மனைவி தந்துள்ள இந்த புகார் குறித்த விசாரணையை போலீசார் தற்போது நடத்தி வருகிறார்கள்












Click it and Unblock the Notifications