வேலூர் நந்தினியின் மாஸ்டர் பிளான்.. உனக்கு 21-எனக்கு 36.. 3 வயது குழந்தையால் சிக்கியது எப்படி?
வேலூர்: வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாரத் என்பவர் சென்னையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நந்தினி.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாரத் சென்னையில் வேலை செய்து வந்தநிலையில், 36 வயதாகும் நந்தினி, 21 வயதாகும் எதிர்வீட்டு சஞ்சய் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாகவும் மாறி உள்ளது. இதனிடையே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவருக்கே நந்தினி எமனாக மாறி உள்ளார். ஆனால் 3 வயது மகளின் வாக்குமூலத்தில் வசமாக சிக்கியுள்ளார்.
கள்ளக்காதல் விவகாரம் இன்று பல குடும்பங்களை அசைத்து பார்த்து வருகிறது. பல குடும்பங்களில் பிரச்சனைக்கு சந்தேகமும், துணையை விட்டு வேறு ஒருவருடன் ஏற்படும் தொடர்பும் காரணமாக இருக்கிறது. அண்மையில் கரூரில் ஒரு சம்பவம் நடந்தது. அடுத்ததாக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சம்பவம் பெண்களுக்கு எதிராக நடந்தது. இந்நிலையில் தற்போது அதே பாணியில் கணவனுக்கு வேலூரில் நடந்துள்ளது.

சமையல் மாஸ்டர்
வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 36 வயதாகும் பாரத் என்பவர் கேட்டரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினி என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
சஞ்சய் மாமா தான்
கடந்த ஜூலை 21ம் தேதி பாரத் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்று மாலை 6 மணியளவில் மனைவி மற்றும் இளைய மகளுடன் குருவராஜபாளையம் பகுதியில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் வீடு திரும்பியபோது பாரத்தை ஒருகும்பல் தீர்த்துக்கட்டியது. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். சம்பவம் நடந்தபோது சம்பவ இடத்தில் உடனிருந்த பாரத்தின் 3 வயது இளைய மகளிடம் போலீசார் விசாரித்தபோது, 'சஞ்சய் மாமாதான் அப்பாவை வெட்டினார்' என அழுதுகொண்டே சிறுமி கூறியிருக்கிறாள்.
நந்தினி வாக்குமூலம்
அதைத்தொடர்ந்து பாரத்தின் மனைவி நந்தினியிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் உண்மை வெளியே வந்தது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக 36 வயதாகும் நந்தினிக்கு, எதிர்வீட்டில் வசிக்கும் 21 வயதாகும் திருமூர்த்தி என்கிற சஞ்சய் (21) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது கணவர் பாரத்துக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அழுது கொண்டே தனது கள்ளக்காதலன் சஞ்சய்யிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சஞ்சய், பாரத்தை கொலை செய்து விடலாம் என கூறியுள்ளார்.
வழிமறித்து சம்பவம்
அதன்படி 2 பேரும் சேர்ந்து பாரத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். நீண்ட நாட்களாக திட்டமிட்டு காத்திருந்த நந்தினி, ஊருக்கு வந்த கணவர் பாரத்தை, மாலை நேரத்தில் கடைக்கு செல்லவேண்டுமென கூறி அவரை அழைத்து சென்றிருக்கிறார். இதுபற்றி நந்தினி தெரிவித்ததன்பேரில் தேங்காய் வெட்டும் கத்தியுடன் வந்த சஞ்சய் சாலையின் குறுக்கே தென்னை மட்டைகளை போட்டு பாரத்தின் பைக்கை வழிமறித்து நிறுத்தி அவரை வெட்டி கொலை செய்தது அம்பலமானது.
3 மணி நேரத்தில் சிக்கிய கள்ளக்காதலன்
பின்னர் தலைமறைவாக இருந்த சஞ்சய்யை அவரது செல்போன் எண்ணை வைத்து 3 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து நந்தினி, சஞ்சய் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications