ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் ஊர்ந்த உயிரினம்.. மதிப்பு 25 லட்சம், திகைத்த திருப்பத்தூர்
வேலூர்: ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்னை-பெங்களூர்-சேலம்-கோவை-குப்பம் வழித்தடத்தை இணைக்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அடுத்தபடியாக ஜோலார்பேட்டை முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கு நேற்று இரவு போலீசார் ஆய்வு செய்த போலீசார். 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளிப் பாம்பு ரயில்வே டிராக்கில் இருந்தது. இதனை திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சதுரங்கவேட்டை படம் பாணியில் இன்னமும் மண்ணுளிப் பாம்புகளை அதிக விலைக்கு வாங்க பலரும் ஆர்வமாக உள்ளனர். பின்னால் சில கட்டுக்கதைகளும், தவறான நம்பிக்கைகளும் முக்கியக் காரணமாக உள்ளன. மண்ணுளிப் பாம்புகளின் உடல் பாகங்கள் சில மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்றும் தவறான நம்பிக்கைகள் பரவி வருவதால் அதனை பலரும் வாங்க விரும்புகிறார்கள்.

சீனாவில் வாங்குகிறார்கள்
அதேபோல் மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாகவும் மண்ணுளி பாம்புகள் சில நாடுகளில் வாங்கப்படுகிறது. குறிப்பாக சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில், மண்ணுளிப் பாம்புகள் மாந்திரீகம் மற்றும் "பிளாக் மேஜிக்" போன்ற செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வீடுகளில் மண்ணுளிப் பாம்புகளை வளர்த்தால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையும் நிலவுகிறது. இதுவும் மண்ணுளிப்பாம்பின் விலையை அதிகரிக்க காரணமாக உள்ளன.
மண்ணுளிப் பாம்பு கட்டுக்கதைகள்
அதேபோல் மண்ணுளிப் பாம்பிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு தவறான தகவல் என்கிற போதிலும் தவறான நம்பிக்கைகளால், சர்வதேச கள்ளச்சந்தையில் மண்ணுளி பாம்புகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு பாம்பு லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது. இது ஒரு பெரிய கடத்தல் கும்பலின் வர்த்தகமாக மாறி இருக்கிறது.

25 லட்சம் மதிப்புள்ள பாம்பு
இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பல ஆயிரம் மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். மேலும் நேற்று இரவு ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது பிளாட்பார்மில் 25 லட்சம் மதிப்பு மிக்க மண்ணுளியான் பாம்பு தென்பட்டது. இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ரயில்வே துணை காவல் ஆய்வாளர் திஜித் மற்றும் ரயில்வே காவலர் சக்திவேல் சென்ற பொழுது பெரிய பாம்பு தென்பட்டது.
திருப்பத்தூரில் ஒப்படைப்பு
மேலும் அதைப் பிடித்து பார்த்த பொழுது தான் அது 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளியான் பாம்பு என கண்டறிந்தனர். பின்பு மண்ணுளியான் பாம்பு ரயில்வே நிலையத்தில் விற்பனைக்காக ரயிலில் கடத்திச் சென்றார்களா அல்லது தானாக வந்ததா என ரயில்வே காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். பின்பு திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததுடன், 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளியான் பாம்பை வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications