குழந்தை கடத்தலா?.. அடித்து துவைத்த ஊர் மக்கள்.. வேலூரில் அப்பாவி அசாம் இளைஞருக்கு நேர்ந்த சோகம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வேலை தேடி திரிந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை, குழந்தை கடத்த வந்திருப்பதாக கூறி பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வேலை வாய்ப்பு விகிதம், ஊதியம், பணி பாதுகாப்பு போன்றவை சிறப்பாக இருக்கிறது. எனவே வேலை வாய்ப்பு தேடி உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் இங்கு வருகின்றனர்.

வட மாநிலங்களில் ஒரு நாள் கூலியாக சராசரியாக ரூ.200-300 வரைதான் கிடைக்கும். ஆனால் இங்கு ரூ.1000 வரை பெற முடியும். எனவே இந்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல வேலை விஷயத்தில் எந்த அடிப்படை உரிமையும் இன்றி அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்பதுதான் பணிசூழல். ஆனால் இவர்கள் 10-12 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களுக்கான அடிப்படை வசதிகளும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. தங்குமிடம், உணவு, மருத்துவம் போன்ற வசதிகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்று அடிக்கடி குற்றச்சாட்டு எழுகிறது. மறுபுறம் இவர்கள் மீது மோதல் சம்பவங்களும் அரங்கேறுகிறது. தங்களுடைய வேலை வாய்ப்புகளை பறித்துவிட்டதாக உள்ளூர் மக்கள் சிலர் இவர்கள் மீது தாக்குதல்களை தொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இதேபோன்று மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்திருக்கிறது. அதாவது, வேலை தேடி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊர் மக்களால் சரமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள பேர்ணாம்பட்டில் இவர் வேலை தேடி சுற்றி திரிந்திருக்கிறார். இவரை பிடித்து அப்பகுதி மக்கள் விசாரித்துள்ளனர். இவர் பேசும் மொழி புரியாததால், இவர் குழந்தைகளை கடத்த வந்திருப்பதாக நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், அவர் படுகாயமடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நிஜகமாகவே வேலை தேடிதான் இப்பகுதியில் இவர் சுற்றி திரிந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. வேலை தேடி வந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications