மக்களே நாடாளுமன்றத்தில் நீங்க கேட்க விரும்பும் கேள்வி என்ன? வாட்ஸ் அப் பண்ணுங்க! -கதிர் ஆனந்த் எம்பி
வேலூர்: நாடாளுமன்றத்தில் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை மின்னஞ்சல் மூலமாகவோ வாட்ஸ் அப் மூலமாகவோ தனக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த்.
இதுவரை தமிழகத்தில் எந்த எம்.பியும் முன்னெடுக்காத புதிய முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் நியமனம்.. தயாநிதி, கதிர் ஆனந்துக்கு புதிய பொறுப்பு!

குளிர்கால கூட்டத்தொடர்
''பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் உணவு மற்றும் பொது விநியோகம், வர்த்தகம், தொழில் தொடர்புகள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், கைத்தறி மற்றும் நெசவுத்தொழில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், குறித்து விவாதங்கள் நடைபெறும்.''

கதிர் ஆனந்த் எம்.பி.
''இதேபோல் குறு, சிறு நிறுவனங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, போக்கவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், ஆயுஷ் மருத்துவம், இராசாயனம் மற்றும் உரங்கள், உடல்நலம் மற்றும் குடும்ப நலன், சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கல்வி, சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறலாம்.''

மின்னஞ்சல் முகவரி
''விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை, கனரக தொழில்கள், உள்நாட்டு விவகாரங்கள், பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை என மேற்குறிப்பிட்ட துறைகளில் உங்களுக்கு உள்ள கேள்விகள், கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை mpoffice@kathiranand.in மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.''

வாட்ஸ் அப் எண்
''அல்லது +91 8754376662 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் தகவல் தெரிவித்தால் அவற்றை தொகுத்து உங்களின் சார்பில் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை காண்பேன் என உறுதி அளிக்கிறேன்.'' இவ்வாறு திமுக நாடளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கதிர் ஆனந்த் கூறியுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும், வாட்ஸ் அப் எண்ணுக்கும் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.