"மத்திய அரசுக்கு ஸ்டாலின் அஞ்சுகிறார்.. அரசு அதிகாரிகள் பயத்திற்கு இதுதான் காரணம்" சிவி சண்முகம்!
விழுப்புரம்: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுவதால் தான், அரசு அதிகாரிகளும் பயப்படுகிறார்கள் என்று அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்ட செயலாளர்களான அருள்மொழி தேவன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என சிவி சண்முகத்திடம் மனு அளித்தனர்.

சிவி சண்முகம் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கூறுகையில், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த 21 கிராமங்களை சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு, வேலைவாய்ப்பினை இன்று வரை நிறைவேற்றவில்லை.

திமுக குரல் கொடுக்கவில்லை
நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலை வழங்காமல் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வழங்க இழப்பீடு வேண்டும். நிலக்கரி சுரங்க நிர்வாகம் மற்றும் மத்திய அரசு இவ்விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது. புதியதாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 300 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. தமிழர், தமிழ் மொழி என்று சொல்லி கொண்டு திரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் திமுக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இதுவரை குரல் கொடுக்கவில்லை.

மு.க.ஸ்டாலின் குழு அமைக்கவில்லை
இதில் மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் தலைமையிலான அரசு கைவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் குழு அமைப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை குழு அமைக்கவில்லை. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 2005க்கு பிறகு நெய்வேலி என்எல்சி நிர்வாகம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

முதல்வருக்கு பயம்
தொடர்ந்து, மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவதாக அமைச்சர் கேன் நேரு கருத்து பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள். அதனால் தான் அமைதியாக ஓய்வில் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

திமுகதிமுக அரசுக்கு கவலையில்லை
தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக திமுக அரசு கவலைப்படவில்லை. ஆனால் நடிகை நயன்தாரா குழந்தையை சட்டப்படி பெற்றாரா என்பது குறித்து தமிழக அரசு கவலைப்படுகிறது என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் குற்றச்சாட்டினார்.












Click it and Unblock the Notifications