சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?
விழுப்புரம்: அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சிவி சண்முகம் தரப்பினர் ஒப்படைத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் சிவி சண்முகம் எடப்பாடியிடம் சரண்டராக விட்டாரா? அல்லது சண்டைக்கு தயாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் வரும் வாரத்தில் அவர் தவெகவில் ஐக்கியமாவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பல்வேறு அணிகள் உருவாகின.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சிவி சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.
அதிமுக பிளவு
இந்த விவகாரம் வெளிப்படையாக பேசப்படாத போதிலும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. அதேநேரத்தில், சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் ஒருங்கிணைந்த அணியாக செயல்பட ஒப்புக் கொண்டனர். இதனால் அதிமுகவில் நிலவி வந்த பிளவு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
சிவி சண்முகம்
ஆனால் அந்த சந்திப்பில் முக்கிய தலைவரான சிவி சண்முகம் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இன்னும் நீடிக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த சூழ்நிலையில் தான், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவி விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக யார் கட்டுப்பாட்டில் அலுவலகம் இருக்கும் என்ற விவகாரத்தில் இழுபறி நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
தற்போது அந்த சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நியமித்துள்ள புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக கவனிக்கத்தக்க நகர்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட அமைப்பின் கட்டுப்பாட்டை சிவி சண்முகம் தரப்பு கைவிட்டதா அல்லது கட்சிக்குள் மேலும் மோதல் வேண்டாம் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
சாவி ஒப்படைப்பு
மறுபுறம், சாவி ஒப்படைப்பு சம்பவம் நடந்த மறுநாளே சிவி சண்முகம் தனது மயிலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை தொடங்கியுள்ளார். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்த அவர், தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், எந்த நேரத்திலும் தன்னை அணுகலாம் என்றும் உறுதியளித்துள்ளார்.
மயிலம் தொகுதி
இந்த நன்றி அறிவிப்பு பயணமும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சிகளை விட, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிவி சண்முகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பரபரப்பாகவே இருக்கிறது. இதற்கிடையில், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற பேச்சுகள் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் அடிபட்டு வருகின்றன.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
எனினும், இதுகுறித்து சிவி சண்முகம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
அவரது ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பினர், அதிமுகவிலேயே இருந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
இதனால், விழுப்புரம் மாவட்ட அலுவலக சாவி ஒப்படைப்பு என்பது ஒரு சாதாரண நடவடிக்கை என்பதை தாண்டி, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான அறிகுறியாக மாறியிருக்கிறது. இந்நிலையில், அடுத்தவாரம் அதாவது திங்கட்கிழமை சிவி சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் எனவும், அன்றே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications