மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் மாற்ற திட்டமா? ராமதாஸ் எழுப்பிய கேள்வி
விழுப்புரம்: 717 மதுக்கடைகள் மூடல் அறிவிப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் மூடப்படும் கடைகளின் பட்டியலை மாவட்ட வாரியாக அரசு உடனே வெளியிட பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் (ராமதாஸ் அணி) ப.ஸ்ரீகாந்தி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூடப்படும் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை சில பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் (ராமதாஸ் அணி) ப.ஸ்ரீகாந்தி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், " தமிழகத்தில் நிலவி வரும் சமூகச் சூழலையும் மாணவர்களின் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மூட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக 276 வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள கடைகள், 186 கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள கடைகள் மற்றும் 255 பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள கடைகள் என அடையாளம் காணப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சமூக அமைதிக்கு வித்திடும் ஒரு நல்வாய்ப்பாகும். பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக மதுக்கடைகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்குக் கிடைத்த ஒரு தொடக்ககால வெற்றியாகவே இதனை நாங்கள் கருதுகிறோம்.
இருப்பினும் அரசின் இந்த அறிவிப்பு முழுமையான வெற்றி பெற வேண்டுமானால் அதில் நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது மிக அவசியமாகும். எந்தவொரு கொள்கை முடிவும் அறிவிப்போடு நின்றுவிடாமல் அது களத்தில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு. எனவே மூடப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த 717 மதுக்கடைகளின் விரிவான பட்டியலை மாவட்ட வாரியாகவும் பகுதி வாரியாகவும் கடை எண்களுடன் தமிழக அரசு உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு இந்தப் பட்டியலை வெளியிடுவதன் மூலம் மட்டுமே அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலுள்ள கடைகள் மூடப்பட்டதை உறுதி செய்ய முடியும். மேலும் மூடப்பட்ட கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதையோ அல்லது பெயரளவில் மட்டும் மூடப்பட்டு பின்வாசல் வழியாகச் செயல்படுவதையோ தடுக்க இந்தப் பட்டியல் ஒரு முக்கிய ஆவணமாக அமையும்.
அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் முழுப்பயனும் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டுமானால், அந்த 717 கடைகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு மக்களின் கண்காணிப்பிற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆரோக்கியமான மற்றும் மதுவற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான இந்த முதற்படியில் அரசு முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம் மூடப்படும் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை சில பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, பூரண மதுவிலக்கு வேண்டி நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டன. அதேசமயம் கடந்த கால அரசுகள் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி மூடப்பட்ட கடைகளை மாற்று இடங்களில் அமைத்துள்ளனர். மேலும் கடந்த ஆட்சி காலத்திலும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு 100 மீட்டர் அருகிலிருந்த மதுக்கடைகள் மூடப்பட்டனவே தவிர, அவைகள் மாற்று இடத்தில் நிறுவப்பட்டன. அதுபோலவே தற்போதும் நடந்து விடக்கூடாது. மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டவையாகவே இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இது இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விதிமுறையும் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான். ஆனால் அவற்றை அதிகாரிகள் தான் முறையாக செயல்படுத்துவதில்லை. இதனாலேயே 15, 16 வயது சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் அரசு மதுபான கடைகள் திறப்பதற்கான நேரம் 12 மணி என்கிற போதிலும் சில தனியார் மது குடிப்பகங்கள் 11 மணிக்கு கடையை திறக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மது குடிப்பகங்கள் நடத்துவோர் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து, ஒவ்வொரு கிராமங்களிலும், நகர, பேரூர்களின் தெருக்களிலும் ஆட்களை போட்டு அரசு நிர்ணயித்த விலையை விட அதிகப்படியான விலைக்கு 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனையை நடத்தி வருகின்றனர்.
இதனால் எந்த நேரத்திலும் மது வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது. சட்டங்களை அறிவிக்கின்ற அதேசமயம் அவற்றை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது போன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய அரசின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ள நிலையில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரை கண்காணித்து மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான உத்தரவாதத்தை முதலமைச்சர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications