மாட்டிக்கிட்டேன்யா.. தயவு செஞ்சி வாயா.. கடையில் நகை திருடி சிக்கியதால் காலில் விழுந்து கெஞ்சிய நபர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடி ஊழியரிடம் சிக்கிய நபர், ‛‛என்னை விட்ருங்க அண்ணா'' என்று காலில் விழுந்து கதறிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.
நகை கடைகளுக்கு வாடிக்கையாளர் போல் சென்று நகைகளை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. கடைகளில் உள்ள ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி இந்த திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதுதொடர்பான காட்சிகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நகைக்கடைக்கு சென்று திருடிய நபர் சிக்கி கொண்டதால் ஊழியர் காலில் விழுந்து கதறி அழுத வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிரபலமான நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைக்கு இன்று ஒருவர் சென்றார். அவர் கடையில் உள்ள நகையை திருடினார். இதை கவனித்த ஊழியர்கள் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து கொண்டனர். அதேவேளையில் அவருடன் வந்த இன்னொரு நபர் கடையில் இருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து ஊழியரிடம் சிக்கிய நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு கடையில் இருந்த ஓடிய நபருக்கு போன் செய்து வரவழைக்கும்படி கூறினர். அப்போது அந்த நபர், தப்பியோடியவருக்கு போன் செய்து பேசினார். ‛‛யப்பா.. உண்மை எல்லாம் தெரிஞ்சி போச்சிப்பா.. நேரில் வாப்பா.. தயவு செய்து வாப்பா.. நேரில் வந்தால் விட்டு விடுவதாக சொல்கிறார்கள். தயவு செய்து வாப்பா..
நான் மாட்டிக்கிட்டேன்.. கடைக்காரங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க பா.. என்னை இன்னும் அடிக்கவில்லைப்பா.. தயவு செய்து வாப்பா.. மன்னிச்சுக்கோங்கப்பா.. என்னோட தொழில் இது இல்லப்பா.. நான் கைத்தொழில் செய்து பிழைக்கிறேன்ப்பா. வீடியோ எடுக்காதீங்க அண்ணா. வீடியோ எடுத்து போடாதீங்க அண்ணா'' என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுதார்.
அதற்கு ஊழியர்கள், ‛‛நீ மெயின் ஆள் இல்லை. அவன் தான் மெயின் ஆள். எனக்கு அவன் தான் வேண்டும். அவனை பிடித்தால் இன்னும் பத்து பேர் சிக்குவார்கள். நான் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிட்டேன்'' என்கிறார். இதையடுத்து அந்த நபர் ஊழியரின் காலில் விழுந்து கெஞ்சி, ‛‛என்னை அடிங்கண்ணா.. அடிங்கண்ணா..'' என்று கையெடுத்து கும்பிட்டு அழுதார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications