விரலை நீட்டி வட்டாச்சியரை எச்சரித்த அமைச்சர் பொன்முடி.. மக்கள் சொன்ன புகாரால் மேடையில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியில் பட்டா வழங்காத வட்டாச்சியரை அழைத்து மேடையில் நின்றபடி விரலை நீட்டி அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் பொன்முடி உள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட முகையூர் அருகே மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு இருந்தது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். அதன்பிறகு அங்கு போடப்பட்டு இருந்த மேடையில் அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தங்களுக்கு வட்டாச்சியர் பட்டா வழங்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் பொன்முடி அங்கிருந்த வட்டாச்சியரை அருகே அழைத்தார். வட்டாச்சியர் மேடைக்கு கீழே நிற்க மேடையில் நின்ற பொன்முடி அவரை நோக்கி விரலை உயர்த்தி பேசினார்.
அப்போது பொன்முடி, ‛‛யார் யாருக்கு கிடைக்கவில்லை என்று கேட்டு பட்டா வழங்க வேண்டும். முதல்வர் வரும்போது இன்னும் 10 நாட்களில் பட்டா கொடுக்க வேண்டும். உங்கள் மாவட்டத்தில் மட்டும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுக்க போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதனால் இந்த தாலுகா, தொகுதியில் எங்கும் பட்டா இன்றி இருக்க கூடாது.
ஒழுங்காக சட்டப்படி நிலம் புறம்போக்காக இருக்கும்பட்சத்தில் பட்டா கொடுப்பதற்கு அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை முதலமைச்சர் செய்து விடுவார். என் தொகுதி. நான் இருந்த ஊர். நான் முதலில் சொன்னது போல் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஊர். இதனால் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. பட்டா கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இதனை கேட்ட வட்டாச்சியர் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த வேளையில் பொன்முடி மேடையில் இருந்த நிர்வாகிகளை நோக்கி, ‛‛இவங்களுக்கு பட்டா வழங்கவில்லை என்று நீங்களாவது என்னிடம் சொல்லி இருக்கலாமே'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications