பொன்முடி செருப்பை சரிசெய்து போட்டுவிட்ட திமுக நிர்வாகி.. வெடித்தது சர்ச்சை.. என்ன நடந்தது?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் படியேறி சென்ற அமைச்சர் பொன்முடியின் காலில் இருந்து செருப்பு கழன்றது. இதையடுத்து அவர் அருகே சென்ற திமுக நிர்வாகி குனிந்து அவரது காலில் செருப்பை மாட்டிவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும் பொன்முடி இருக்கிறார்.

முதலில் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை கோவி செழியனிடம் வழங்கப்பட்டது. பொன்முடிக்கு வனத்துறை வழங்கப்பட்டது.
வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். பொன்முடி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் பொறுப்பு அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.
இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொன்முடி பங்கேற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். படிக்கட்டில் பொன்முடி ஏறி சென்றார். செஞ்சி மஸ்தானின் தோளில் கையை வைத்தபடி பொன்முடி படிக்கட்டுகளில் ஏறி சென்றார்.

இந்த சமயத்தில் திடீரென்று அவர் அணிந்திருந்த செருப்பு கழன்றது. பொன்முடியின் இடதுகாலில் அணிந்திருந்த செருப்பு கழன்றது. இதனால் பொன்முடியால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. அவர் அப்படியே நின்றார். இதையடுத்து பொன்முடியின் அருகே நடந்து சென்ற திமுக நிர்வாகி குனிந்து பொன்முடியின் காலில் கழன்ற செருப்பை சரிசெய்து போட்டு விட்டார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருவதோடு சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோவை பார்ப்போர் பொன்முடி குனிந்து தனது செருப்பை சரிசெய்யமாட்டாரா? கட்சி நிர்வாகியை வைத்து தான் செருப்பை காலில் அணிவாரா? என்ற கேள்வி எழுப்பி வருவதோடு, பொன்முடியின் செயலை கண்டித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications