உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அடுத்தடுத்து ஆம்னி பஸ்களுக்கு ஆப்பு.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி
விழுப்புரம்: காதைக் பிளக்கும் கனரக வாகனங்களின் ஒலி எழுப்பான்கள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நள்ளிரவில் ஆம்னி பேருந்துகள், லாரிகள், உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தி ஆய்வுக்குப் பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அபராதம் விதித்தார். ஒலியின் அளவு 90 என இருக்க வேண்டும். ஆனால் பரிசோதித்த அனைத்து வாகனத்திலும் 106, 107, 108 என இருந்ததால் அந்த வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பான்களை அகற்ற அறிவுறுத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக அபராதமும் விதிக்க உத்தரவிட்டார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, காதை பிளக்கும் வகையில் ஆம்னி பேருந்துகள், லாரிகளும், வேன்களும், கார்களும் அதிக சத்தத்துடன் ஹாரன்களை வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இருசக்கர வாகன ஒட்டிகள் எல்லாம் முன்னால் சென்றால், அவர்களின் ஹாரனுக்கு பயந்து வேகமாக சாலையின் ஓரத்தில் ஒதுங்கி வழிவிடுவார்கள். மீறினால், பயமுறுத்தும் வகையில் ஹாரன் அடிப்பது, இடிப்பது போல் பின்னால் வருவது போன்ற செயல்களை சில வாகன ஓட்டிகள் செய்வார்கள்.

அதேபோல் சிக்னல்களில் கண்டபடி வேகமாக வந்து, அதிவேகமாக ஹாரன் அடித்தபடி, சிவப்பு நிறம் எரியும் போதும் செல்வார்கள். இப்படி பல்வேறு விதிமீறல்களை செய்வதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் இப்படி அதிக சத்தத்துடன் ஹாரன் வைத்துக் கொள்ள தடை உள்ளது. மீறி வைத்தால், ஹாரனை பறிமுதல் செய்து, அபராதமும் அதிகாரிகளால் விதிக்கப்படும். அடிக்கடி இது நடக்காது. எப்போதாவது ஒருமுறை இப்படி நடக்கும்.
இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நள்ளிரவில் ஆம்னி பேருந்துகள், லாரிகள், உள்ளிட்ட கனரக வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடியாக தடுத்து நிறுத்தினார்.
வண்டியில் ஹாரன் ஒலியின் அளவு 90 என இருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் பரிசோதித்த அனைத்து வாகனத்திலும் 106, 107, 108 என இருந்ததால் அந்த வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பான்களை அகற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வலியுறுத்தினார். மேலும் ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக அபராதமும் விதிக்க உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதனை நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரம் பெரும்பாலும் வாகனங்களில் தற்போது நான்கு, ஆறு என விளக்குகள் பொருத்துகிறார்கள். மேலும் விளக்குகளில் நடுமையத்தில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதில்லை. இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் கண் பாதிக்கப்படுகிறது மேலும் வாகனங்களில் அத்தியாவசிய மின்விளக்குகளை தவிர கூடுதல் விளக்குகளை பொருத்தினால் அதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தால் இன்னும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், போக்குவரத்தில் வேக கட்டுப்பாடு அவசியம். அனைத்து வாகனங்களும் அதி வேகமாக செல்வது, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை கதி கலங்க வைத்து விடுகிறது எனவே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications