மதில் மேல் பூனையாக ராமதாஸ்.. கூட்டணி குறித்து தைலாபுரம் வெளியிட்ட அப்டேட்
விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளனர். பாமகவில் ராமதாஸ் தரப்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியுள்ளது. அப்போது ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர்.

கூட்டணி குளறுபடி
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக கூட்டணியில் முட்டு கட்டை போட்டுவிட்டனர். ராமதாஸ் தரப்பிலான பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளனர். அன்புமணி தரப்பிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். ராமதாஸ் திமுக அல்லது தவெகவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ராமதாஸ் திமுகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதனால் அவர் என்ன முடிவு செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதுவரை அன்புமணியுடன் மல்லுக்கட்டி மாம்பழம் சின்னத்திற்கு சட்டப் போராட்டம் நடத்துவதில் தான் ராமதாஸ் அணி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ராமதாஸ் தரப்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டவர்களுக்கு தைலாபுரத்தில் இன்று நேர்காணல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது.
பாமக நேர்காணல்
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இன்றைக்கு 13 மாவட்டங்களில் விருப்ப மனு அளித்த நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு இருக்கும். கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
திமுக மீதான விமர்சனத்திற்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை. விரைவில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றி வருகிறோம். கூட்டணி தொடர்பாக பலரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தையில் முடிவு செய்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications