தைலாபுரத்தில் சசிகலாவுக்கு கமகம விருந்து.. கூட்டணி உறுதியானதால் ராமதாஸ் ஏற்பாடு
விழுப்புரம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமக ராமதாஸ் - சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க இடையே நேற்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. சசிகலாவுக்கு தைலாபுரத்தில் ராமதாஸ் தடபுடல் விருந்து பரிமாறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

ராமதாஸ் கூட்டணி முடிவு
அன்புமணி ராமதாஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறார். கூட்டணியில் இணைந்ததற்கு பிரதிபலனாக அன்புமணிக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை கைப்பற்ற ராமதாஸ் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அன்புமணி மீது அவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இதனால் பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரித்தது திமுக தான் என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் செய்ய எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. ராமதாஸ் தங்கள் கூட்டணியில் இணைந்துவிடுவார் என்ற அதிமுக கூட்டணியின் கனவு நிறைவேறவில்லை.
சசிகலாவுடன் கூட்டணி
ராமதாஸ் நீண்டகாலமாக கூட்டணியை அறிவிக்காமல் இருந்தார். ராமதாஸ் திமுக அல்லது தவெக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணையக விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவெக - ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தையும் நிறைவேறவில்லை.
இதனால் ராமதாஸ் ஆதரவாளர்கள் அப்செட்டாகினார்கள். கூட்டணி குறித்து ராமதாஸ் நீண்ட நாளாக ஆலோசனை நடத்திய நிலையில், சசிகலா தொடங்கியுள்ள அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ராமதாஸ் கூட்டணியை இறுதி செய்தார். இதற்கான ஒப்பந்தம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று கையெழுத்தானது.
தைலாபுரத்தில் விருந்து
அ.இ.பு.த.ம.மு.க பொதுச்செயலாளர் சசிகலா பாமக நிறுவனர் ராமதாஸ் கையெழுத்திட்டனர். பொதுவாக கூட்டணி அமைந்தவுடன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று கூட்டணி இறுதியானவுடன் சசிகலா மற்றும் அவரின் நிர்வாகிகளுக்கு தைலாபுரத்தில் ராமதாஸ் விருந்து அளித்தார். இதில் இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications