அன்புமணி வராரா..பார்த்துட்டு போலாம்னு வந்தேன்! பாமக கூட்டத்தில் புகுந்த பாம்பு! விளையாடிய பாட்டாளிகள்!
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கட்சியை மறு சீரமைப்பு செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 60 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்த அவர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த கட்ட பயணங்களை மேற்கொண்டார்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கொல்லியங்குனம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்
பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,"2026 இல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும் எனவும் வெற்றி பெற வியூகங்கள் அமைப்போம் எனக் கூறியிருந்தார். மேலும் விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி அடையாத மாவட்டமாக இருப்பதாகவும் இந்த மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

கூட்டத்திற்குள் பாம்பு
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அன்புமணி ராமதாஸ் வருகையை முன்னிட்டு கொள்ளியங்குனம் பகுதியில் உள்ள திறந்தவெளி மாந்தோப்பில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மேடையோடு எதிரே இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இருக்கையில் கட்சியினரும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் அமர்ந்திருந்த நிலையில் அங்கு இருந்த மரத்தில் இருந்த கூட்டில் இருந்து திடீரென சிறிய கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று திடீரென கூட்டத்திற்குள் விழுந்தது.

திடீர் பரபரப்பு
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பெண்களும் சில தொண்டர்களும் அலறியடித்து ஓடினர். இதை அடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பாம்பை பிடித்து விளையாடினர். பிறகு அந்த பாம்பு அங்கிருந்து துரத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications