நடிகை பூஜாவுக்காக ஆசையுடன் ஓடி வந்த டைரக்டர்.. விழுப்புரம் சவுக்கு தோப்பில் பெண் தந்த பிக் சர்ப்ரைஸ்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே குறும்பட இயக்குனர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த கொலை வழக்கு தொடர்பாக சினிமா துணை நடிகை பூஜா உட்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. யாரிந்த துணை நடிகை??
கடந்த 7ம் தேதி சு.பில்ராம்பட்டு மதுரா வேடாலம் கிராம எல்லைப்பகுதியில் உள்ள சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.. அந்த சடலத்தில் ஏராளமான வெட்டுக் காயங்கள் இருந்தன..

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அரகண்டநல்லூர் போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அதில் கடந்த 3ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய ஒரு நபர், வழி தெரியாமல் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது பதிவாகியிருந்தது..
உடனே சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அந்த நபர் சென்னையில் இருந்து புறப்பட்டது முதல் விழுப்புரம் மற்றும் கண்டாச்சிபுரம் வந்து சேரும் வரை ஒரே பெண்ணிடம் அடிக்கடி பேசியது உறுதியானது..
ஷார்ட் பிலிம் டைரக்டர்
அந்த பெண் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை பூஜா என்பது தெரியவந்தது.. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல பகீர் உண்மைகள் வெளிவந்துள்ளன..
கொலை செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் நம்பைகுறிச்சியைச் சேர்ந்த 46 வயதான குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் என்பது அம்பலமாகி உள்ளது..
ஜெயக்குமார் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து குறும்படங்கள் தயாரித்து வருபவராம்.. டப்பிங் பேசுவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பூஜாவுக்கு, ஷார்ட் பிலிம் எடுத்து தருவதாகக் கூறி ஜெயக்குமார் பணம் மற்றும் நகைகளை கொடுத்து உதவியுள்ளார்.. ஒருகட்டத்தில் பூஜாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் வற்புறுத்தியுள்ளார்..
காதலிக்க டார்ச்சர்
ஆனால், பூஜா ஏற்கனவே தேவா என்பவரை காதலிப்பதாக சொல்லி, ஜெயக்குமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.. இருந்தாலும் ஜெயக்குமார் விடாமல் பூஜாவைத் தொடர்புகொண்டு தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்ததோடு, தங்களுக்குள் இருக்கும் நெருக்கமான படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்..
இதனால் ஆத்திரமடைந்த பூஜா, தனது காதலன் தேவாவிடம் இது குறித்து அழுதுள்ளார்.. இதையடுத்து ஜெயக்குமாரை தீர்த்துக்கட்ட தேவா திட்டம் தீட்டியுள்ளார்.. சென்னையில் கொலை செய்தால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்பதால், தேவாவின் உறவினர்கள் வசிக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஜெயக்குமாரை வரவழைக்க முடிவு செய்தனர்..
திட்டப்படி, பூஜா தனது தாத்தா வீட்டில் தன்னை அடைத்து வைத்துள்ளதாகவும், உடனே வந்து தன்னை அழைத்து சென்றால் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஜெயக்குமாரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்..
பூஜா வாக்குமூலம்
இதை நம்பி வந்த ஜெயக்குமாரை, தேவாவின் உறவினர்களான 2 பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.. அங்கு மறைந்திருந்த தேவா, பூஜா, அய்யப்பன் ஆகியோர் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து சவுக்குத் தோப்பில் வீசி விட்டார்களாம்.. இவ்வளவும் வாக்குமூலமாக போலீசாரிடம் பூஜா தெரிவித்துள்ளார்..
இதையடுத்து இந்த வழக்கில் பூஜா, அவரது காதலன் தேவா, நண்பர் அய்யப்பன், தோழி துர்கா, தேவாவின் பெரியப்பா சடையாண்டி, பெரியம்மா பூங்காவனம், குப்புசாமி மற்றும் இரண்டு பள்ளி மாணவர்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.. இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. ஒரு குறும்பட டைரக்டர் தனது பேராசையினால் உயிரை விட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!












Click it and Unblock the Notifications