கட்டிட காண்ட்ராக்டரிடம் 21 லட்சம் அபேஸ்! திருச்சியில் தில்லாலங்கடி புகார்! திருநங்கை அதிரடி கைது!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வீடு கட்டிக் கொடுத்த கட்டிட காண்ட்டிராக்டரிடம் 21 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்த திருநங்கை பபிதா ரோஸ் மீது, ஏற்கெனவே பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது, திருச்சியை சேர்ந்த கட்டிட காண்ட்டிராக்டரிடம் 21 லட்சம் ரூபாய் பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் புது வீடு
திருமண மோசடியில் சிக்கிய திருநங்கை பபிதா ரோஸ், திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில், அரண்மனை தோட்டம் அருகே, புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது வீட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கம்மாள தெருவைச் சேர்ந்த கட்டிட காண்ட்டிராக்டரான முருகேசன் என்பவர், ஒரு சதுர அடிக்கு, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு கட்டித் தருவதாக ஒப்பந்தம் பேசி வீட்டை கட்டி கொடுத்துள்ளார். மேலும் அந்த வீட்டைச் சுற்றியிலும் சுற்றுச் சுவரும் முருகேசன் கட்டி கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, கட்டிட காண்ட்டிராக்டரான முருகேசனிடம் திருநங்கை பபிதா ரோஸ், 10 லட்சம் ரூபாயை கடனாகவும் வாங்கியுள்ளார்.

ரூ.21 லட்சம் மோசடி
இந்நிலையில், தனக்கு தரவேண்டிய மொத்தம் ரூ.21 லட்சத்தை, திருநங்கை பபிதா ரோஸிடம், கட்டிட காண்ட்டிராக்டரான முருகேசன் கேட்டுள்ளார். அப்போது, பணம் கொடுக்க முடியாது எனக் கூறிய திருநங்கை பபிதா ரோஸ், முருகேசனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட முருகேசனை, தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார் பபிதா ரோஸ்.

காவல் நிலையத்தில் புகார்
இதனால் செய்வதறியாது திகைத்த கட்டிட காண்ட்டிராக்டரான முருகேசன், இதுதொடர்பாக வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முருகேசன் அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்ததும், திருநங்கை பபிதா ரோஸ் தலைமறைவானார்.

திருநங்கை கைது
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த திருநங்கை பபிதா ரோஸை, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட பபிதா ரோஸ், மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டு, மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். திருநங்கை பபிதா ரோஸ், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், பலரிடம் ஏமாற்றி பணம் பெற்றதாகவும் ஏற்கெனவே அவர் மீது பல்வேறு புகார்கள் இருந்து வருகிறது. தற்போது, வீடு கட்டிக் கொடுத்த கட்டிட காண்ட்டிராக்டரிடம் பண மோசடி வழக்கில் திருநங்கை பபிதா ரோஸ், கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications