இப்பவே சகதிக் காடு.. 12 நாட்கள் தான்.. இன்னும் மழை வெளுக்கப் போகுது.. விஜய் கட்சி மாநாடு நடக்குமா?
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், கனமழை காரணமாக மாநாடு நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. வரும் நாட்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவதே தனது லட்சியம் என சூளுரைத்துள்ளார் விஜய். தவெகவை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சிக் கொடியை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில்தான் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தவெகவின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கொள்கைகளை அறிவித்து முதல் உரையாற்ற உள்ளார்.
கட்சி மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்காக ஒவ்வொரு செயல்பாட்டிற்காகவும் 27 குழுக்கள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், மாநாட்டு பணிகளை செய்ய அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் கட்சி மாநாட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து அழைத்து செல்லவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்து கொடுக்கவும் சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை பகிர்வுக்குழு, அவசர உதவிக்குழு, சமூக ஊடக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடம் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு இன்னும் வெறும் 12 நாட்களே உள்ள நிலையில் வரும் 27 ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை திட்டமிட்டபடி முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, மாநாட்டை செப்டம்பர் மாதமே நடத்த திட்டமிட்ட நிலையில், அனுமதி கிடைக்க தாமதம், ஏற்பாடுகள் தாமதம் ஆகிய காரணங்களால் தேதி தள்ளி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கனமழை காரணமாக மாநாட்டு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications