தவெகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வசூலா.. எச்சரித்த புஸ்ஸி ஆனந்த்.. என்ன நடந்தது?
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் நாவட்டத்தில் நகரச் செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆனந்த் எச்சரிக்கை விடுத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை தொடங்கி இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில் தான் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி தனது கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதனால் விஜய்-ன் அரசியல் மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது.

அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் நியமனம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து, நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதனிடையே பனையூரில் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் முதல்முறையாக பரந்தூர் வந்து மக்களை நேரடியாக சந்தித்தார். மக்கள் மத்தியில் விஜய் ஆற்றிய உரை தமிழக அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ளது. அதேபோல் எந்த இடைத்தேர்தலிலும் பங்கேற்காமல் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே விஜய் இயங்கி வருகிறார்.
அதற்கு இன்னும் 14 மாதங்கள் இருக்கும் நிலையில், வரும் மே மாதத்திற்கு பின் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சி தொடங்கி ஓராண்டை எட்டவுள்ள நிலையில், முதலாமாண்டு நிறைவு விழாவில் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தயாராகி வருகின்றனர்.
இந்த விழுப்புரம் மாவட்ட தவெக வாட்ஸ் அப் குழுவில், கட்சிப் பதவிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், நகரச் செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ் அப் குழுவில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் நம்பரும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது ஆனந்த் பேசுகையில், நான் தெளிவாக சொல்கிறேன்.. யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காக பணம் வாங்கினார்கள் என்றால்.. அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications