சாலை விபத்தில் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மரணம்... முதல்வர் நேரில் அஞ்சலி... ஸ்டாலின் இரங்கல்
Recommended Video

திண்டிவனம்: விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவினருக்கு நேற்று விருந்து கொடுத்தார். அதில் கலந்துகொண்ட ராஜேந்திரன், அங்கிருந்து அவரது சொந்த ஊரான வானூருக்கு நள்ளிரவில் சென்றார்.

இன்று காலை 4 மணியளவில் சொந்த ஊரில் இருந்து அவரது வீடு உள்ள விழுப்புரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்துகொண்டிருந்தபோது, அவர் சென்ற கார் சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் எம்.பி, ராஜேந்திரன், அவரது கார் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எம்.பி, ராஜேந்திரன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எம்.பி. ராஜேந்திரனின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது,
உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் திரு ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications