காதலனை காலி செய்ய காஃபியில் எலி பேஸ்ட்: இளம்பெண் கைது! விழுப்புரம் போலீசார் அதிரடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே எலி பேஸ்டை காஃபியில் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்ய முயற்சி செய்த ரம்யா என்ற பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே கீரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ஜெயசூர்யா. ஜெயசூர்யா 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் இ சேவை மையம் ஒன்றை அமைத்து அதனை நடத்தி வந்தார். இந்த இ சேவை மையத்துக்கு வந்த தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ரம்யா என்ற பெண்ணுடன் ஜெயசூர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அவ்வப்போது பேசி வந்தனர். இதில் மெல்ல மெல்ல இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பிறகு போன் நம்பர்களை வாங்கிக்கொண்டு நாள்தோறும் பேசி வந்தனர். நாளடைவில் இவர்கள் காதல் வளர்ந்தது. அவ்வப்போது வெளியில் சந்தித்து பேசி வந்தனர். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து விசாரித்ததில் ஜெயசூர்யாவின் குடும்பத்தினர் அண்ணன் தங்கை உறவு வரும் இதனால் காதலை விட்டுவிடு என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆசையாய் காதலித்து வந்த ரம்யாவிடம் இனி நாம் காதலை விட்டுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் ரம்யா என்ன ஆனாலும் சரி நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஜெயசூர்யா விடாப்பிடியாக நாம் இனி காதலிக்க வேண்டாம். என்னை மறந்துவிடு என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். ஆனாலும் காதலை கைவிட முடியாமல் ரம்யா தவித்து வந்துள்ளார்.
இது பற்றி தன் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் பேசி கவலையில் இருந்துள்ளாராம். இந்த நிலையில் தான் கடந்த மாதம் 11 ஆம் தேதி ஜெயசூர்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு, கையில் எலி பேஸ்டோடு ஜெயசூர்யா வீட்டுக்கு ரம்யா சென்றதாக கூறப்படுகிறது. என்னடா நலமாக இருக்கிறாயா என்று கேட்டுவிட்டு, ஒரு காஃபி போட்டு தரட்டுமாடா என்று கேட்டிருக்கிறார். ஜெயசூர்யாவும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதையடுத்து ரம்யாவே கிச்சனுக்குள் சென்று காஃபி போட்டு அதில் தான் கொண்டு வந்த எலி பேஸ்டை போட்டு ஜெயசூர்யாவிடம் குடிக்க கொடுத்து இருக்கிறார். அவரும் காபியை குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே வீட்டுக்கு சென்ற ரம்யா வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துள்ளார். அதில், உடல்நிலை எதுவும் சரியில்லையா என்று கேட்க.. ஆமாம் எதோ ஒருமாதிரி இருக்கிறது என்று இவரும் சொல்லியிருக்கிறார்.
அப்போது தான் தான் காஃபியில் எலி பேஸ்டை கலந்ததாக ரம்யா சொல்லியிருக்கிறார். இதற்கிடையே உடல்நலன் மோசமடைய ஜெயசூர்யா தன் உறவினர்கள், நண்பர்களுக்கு எலி பேஸ்டை சாப்பிட்டு விட்டதாக சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவருக்கு ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளியில் தெரிந்த நிலையில், ஜெயசூர்யாவின் தந்தை ஏழுமலை ரம்யா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் கொலை முயற்சி செய்ததாக ரம்யா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்ததும் ரம்யாவின் குடும்பத்தினர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரம்யாவை இன்று மாலை போலீசார் கைது செய்தனர். எலி பேஸ்ட் கலந்து காதலனை கொலை செய்ய முயற்சி செய்தாரா என்று அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவெண்ணைநல்லூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications