இதுதான் தீபாவளி போனஸ்.. 30 பேருக்கு மின்சார பைக் வழங்கிய தனியார் நிறுவனம்.. அசந்துபோன ராஜபாளையம்
பெங்களூர்: தீபாவளி போனஸாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆடை தயாரிப்பு நிறுவனம் 30 ஊழியர்களுக்கு மின்சார பைக் வழங்கி அசத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு புத்தாடை, இனிப்புகளும் வழங்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தீபாவளி.. தமிழ்நாட்டில் நாளை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட தயாரகிவிட்டனர். நேற்று முன்தினம் முதலே சென்னை, பெங்களூர் உள்பட வெளி நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக வாகனங்களில் புறப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு வாங்கி தயாராக இருக்கின்றனர். நாளை காலை விடிந்தவுடன் தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் தங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்ட்டுள்ளது.
இந்த போனஸ் என்பது நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் மாறுபடுகிறது. அதன்படி சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு புத்தாடை, பட்டாசு பாக்ஸ், போனஸ் பணம் வழங்கி உள்ளன. இன்னும் சில நிறுவனங்களில் புத்தாடை, ஸ்வீட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களில் சம்பள பணத்தின் குறிப்பிட்ட சதவீதம் போனஸாக வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் போனஸாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து இன்பஅதிர்ச்சி செய்துள்ளது. அதாவது நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்கள் சிறப்பாக பணியாற்றிய 30 ஊழியர்களுக்கு போனஸாக மின்சார ஸ்கூட்டர், மின்சார பைக்கை வழங்கி உள்ளது.
தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சார்பில் ஊழியர்களிடம் மின்சார ஸ்கூட்டர், மின்சார பைக்கிற்கான சாவி வழங்கப்பட்டது. இந்த மின்சார பைக்கின் மொத்த விலை ரூ.30 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர். ஊழியர்களுக்கு மின்சார பைக் மட்டுமின்றி புத்தாடை, இனிப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த நிறுவன உரிமையாளர்களை பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் போனஸ் கிடைக்காத வருத்தத்தில் இருப்பவர்கள், ‛‛எங்கள் நிறுவன உரிமையாளர் கண்ணில் படும்வரை பகிரவும்'' என்ற கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications