ரீல்ஸ் விபரீதம்.. ரோட்டில் நின்று சண்டை போடுவது போல் நடித்து விபத்தில் சிக்க வைத்த இளைஞர்கள்!
விருதுநகர்: சிவகாசியில், ரீல்ஸ் மோகத்தில் சாலையில் நின்று சண்டையிடுவது போல் நடித்து, வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசைதிருப்பி விபத்தில் சிக்க வைத்த இளைஞர்களின் ரீவீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலத்தில் இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என எல்லா தரப்பினரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். பிரபலமாவதற்காக வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதிக வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் பலரும் சில அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சிலர் உயிரையே பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்து வாழ்க்கையை இழக்கின்றனர். சிலர், அடுத்தவர்களின் உயிரை பணயம் வைத்து விளையாடுகின்றனர்.
சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தனர். தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர், சாலையின் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை கவனிக்காமல் அதன் பின்பக்கமாக மோதி கீழே விழுந்தார்.
அவர் விபத்தில் சிக்கியதை பார்த்து சிரித்தவாறு கேலியும், கிண்டலும் செய்த இளைஞர்கள், அந்தக் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன் மட்டுமின்றி, தங்களது சமூக வலைதள பக்கங்களில் தனை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
ரீல்ஸ் மோகத்தில் வேண்டுமென்றே இது போன்ற விபரீதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற ரீல்ஸ் மோக இளைஞர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications