விருதுநகரில் புதிய வீடு கட்டிய சென்னை பெண் ஐடி ஊழியர்.. வீட்டுக்கே போன மின் அதிகாரி.. மறக்க மாட்டார்
விருதுநகர்: விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்த லலிதாம்பிகை என்ற பெண் சென்னை ஐடி நிறுவனத்தில் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் விருதுநகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். தனது வீட்டில் மின்சார மீட்டரை இடமாற்றம் செய்ய மின்வாரியத்தில் விருதுநகர் வடக்கு ஊரக பிரிவு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கு உதவி என்ஜினியராக பணியாற்றும் மாடக்குமார் என்பவர் 35000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை கைது செய்ய வைக்கலாம். கையும் களவுமாக பிடித்து கைது செய்ய வைக்க லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். விருதுநகரில் புதிதாக வீடு கட்டிய சென்னை ஐடி ஊழியர், லஞ்சம் வாங்கிய அதிகாரியை சிக்க வைத்துள்ளார். என்ன நடந்தது. விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்த 40 வயதாகும் லலிதாம்பிகை என்பவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மின்சார மீட்டர்
விருதுநகரில் லலிதாம்பிக்கை புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அங்கு மின்சார மீட்டரை இடமாற்றம் செய்ய வேண்டியதிருந்தது. இதற்காக மின்வாரியத்தில் விருதுநகர் வடக்கு ஊரக பிரிவு உதவி என்ஜினியராக பணியாற்றும் மாடக்குமார் (38) என்பவரை அணுகியிருக்கிறார். அப்போது மாடக்குமார் மீட்டரை இடமாற்றம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என லலிதாம்பிகையிடம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத லலிதாம்பிகை இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ்
இதையடுத்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார், மாடக்குமாரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், லலிதாம்பிகையிடம் ரசாயனம் தடவிய ரூ.35 ஆயிரம் நோட்டுகள் வழங்கப்பட்டன. பணம் தயாராக இருப்பதாக மாடக்குமாரிடம் அவர் செல்போன் மூலம் கூறினார். அதற்கு அவர் வீட்டில் வந்து பணத்தை பெற்று கொள்வதாக கூறியுள்ளார்.
பணம் வாங்கிய மின் அதிகாரி
அதன்படி லலிதாம்பிகையின் வீட்டுக்கு சென்று மாடக்குமார் பணத்தை வாங்கியிருக்கிறார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாடக்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மாடக்குமார் இடைநீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிறைக்கு சென்ற அவர், ஜாமீனில் வெளியே வந்தாலும் வழக்கை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications