பெற்ற மகளை.. பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை.. போக்சோவில் கைது.. விருதுநகரில் நடந்த கொடுமை
விருதுநகர்: விருதுநகர் அருகே பெற்ற மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்யும் எண்ணத்தில் தவறாக நடந்துகொண்ட தந்தையை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன. கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் செவிலியர் பாலியல் கொலை, மகராஷ்டிர மாநிலத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை என தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், விருதுநகர் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையின் செயல் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு வீடு கூட பாதுகாப்பு இல்லாத பகுதியாக மாறியுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளதை இச்சம்பவம் பிரதிபலிக்கின்றது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்த நிலையில், இரண்டாவதாக வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே தொடர்ந்து ஏற்பட்டு வந்த குடும்பப் பிரச்னை காரணமாக அப்பெண்ணையும், குழந்தையையும் விட்டுவிட்டு அந்த நபர் பிரிந்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற அந்த நபர் மீண்டும் குடும்பத்தோடு வந்து சேர்ந்துள்ளார். இதையடுத்து, இந்த தம்பதி விருதுநகர் மாவட்டத்துக்கு குடிபெயர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது 17 வயதான மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில், தான் பெற்ற மகளின் மீதே அந்த நபருக்கு தவறான எண்ணம் தோன்றியுள்ளது. இதையடுத்து, சிறுமியின் தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதனால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான சிறுமி இதனை யாரிடம், எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியின் தந்தை தனது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது, தந்தையிடம் இருந்து சிறுமி தப்பித்து வெளியில் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, மறுநாள் காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, தந்தை தவறாக நடந்து கொள்வது குறித்து பள்ளித் தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர், மாணவியின் மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி குறித்து 1098 எண் மூலமாக விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்குப் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் பள்ளிக்கு விரைந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்தச் சிறுமி அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications