அடேங்கப்பா 82 அடி நீள டைனோசரா?.. போர்ச்சுகலில் கிடைத்த புதை படிமங்களால் ஆய்வாளர்கள் வியப்பு!
வாஷிங்டன்: போர்ச்சுகலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த டைனோசரின் 82 அடி நீள புதை படிமங்கள் கிடைத்துள்ளதால் அது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாம் வசிக்கும் இந்த பூமியில் மிகபெரிய உயிரினமான டைனோசர்களும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து வந்தன.
23 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய இந்த டைனோசர்கள் 16 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

டைனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்
விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த உயிரினம் அடியோடு அழிந்ததாக கூறப்படுகிறது. எனினும் தற்போது டைனோசர் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை, தடயங்களை திரட்ட விஞ்ஞானிகள் முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலில் டைனோசரின் படிம எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

படிம எலுப்புக்கூடுகள் கிடைத்தன
பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர் இனங்களில் ஒன்றாக கருதப்படும் 'சாரோபோட்' டைனோசர் வகையை சேர்ந்தது என்று கருதப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டில் உள்ள பொம்பல் என்ற பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது வீட்டின் பின்புறம் குழிகளை தோண்டியுள்ளார். அப்போது டைனோசரின் படிம எலும்புக்கூடுகள் கிடைத்தன. இந்த தகவல் அறிந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

39 அடி உயரம்
இந்த மாத துவக்கத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த ஆய்வாளர்கள் இதை தோண்டி எடுத்தனர். இதன்மூலம் அந்த டைனோசர் 39 அடி உயரமும் 82 அடி நீளமும் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர் இனங்களில் ஒன்றான இது, தாவர உண்ணி என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ''டைனோசர் போன்ற விலங்குகளின் அனைத்து விலா எலும்புகளும் கிடைப்பது வழக்கமானது கிடையாது'' என்றனர்.

மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள்
ஐரோப்பாவில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் இதுதான் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. டைனோசர் அதன் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதே நிலையில் தான் இறந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேல் வண்டல் பாறைகளில் இந்த படிமங்கள் கிடைத்திருப்பதால் இந்த டைனோசர்கள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பூமியில் வாழ்ந்த டைனோசர் இனங்களிலேயே மிகவும் பெரியவை என்று சொல்லப்படும் சௌரோபாட்ஸ் டைனோசர்கள் சுமார் 160 மில்லியன் முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications