அமெரிக்காவில் 90 அடியில் அனுமன் சிலை.. ஹெலிகாப்டரில் வந்து 70 அடிக்கு மாலை.. வியந்து பார்த்த மக்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இப்போது மிகப் பிரம்மாண்டமான அனுமன் சிலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்த அனுமன் சிலை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மூன்றாவது மிக உயரமான சிலையாக இருக்கும் இது, இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள மிகப் பெரிய அனுமன் சிலை என்ற சாதனையையும் படைத்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது.

இதன் காரணமாக அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு இடங்களிலும் கோயில்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே இப்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் அருகே 90 அடி உயரத்தில் வெண்கலத்தில் செய்யப்பட்ட அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது.
அனுமன் சிலை: அமெரிக்காவில் இந்து மதத்தினர் அதிகரித்து வரும் நிலையில், இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை பல கிமீ தூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரிகிறதாம். அந்தளவுக்குப் பெரிய சிலையாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் டிராகன் (110 அடி) அடுத்து 3ஆவது மிக உயரமான சிலை என்ற சிறப்பை இந்த அனுமன் சிலை பெற்று இருக்கிறது.
ஒற்றுமைக்கான சிலை அதாவது ஆங்கிலத்தில் The Statue of Union என்று அழைக்கப்படும் இந்த சிலை உலகின் மிக உயரமான சிலைகளில் ஒன்றாகும்.. இது தவிர மேலும் பல சாதனைகளையும் இந்த சிலை படைத்து இருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள மிகவும் உயரமான அனுமன் சிலையாகவும், டெக்சாஸில் உள்ள மிக உயரமான சிலையாகவும் இது இருக்கிறது.
எப்போது திறக்கப்பட்டது: இந்த சிலைக்கான பிராண பிரதிஷ்டை மஹோத்ஸவ விழா கடந்த ஆகஸ்ட் 15 முதல் 18 வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது. டெக்சாஸில் உள்ள சுகர் லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயிலில் இந்த சிலை திறக்கப்பட்டது. தன்னலமற்ற குணம், பக்தி மற்றும் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் இந்த சிலை இருக்கும் என்றும் ராமாயணத்தில் ராமரையும் சீதையையும் மீண்டும் ஒன்றாகக் கொண்டுவர அனுமன் உதவியதால் இதை ஒற்றுமைக்கான சிலை என்று அழைப்பதாகவும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாகக் கோயில் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த பிரமிக்க வைக்கும் சிலை, பத்ம பூஷன் விருது பெற்றவரும் புகழ்பெற்ற வேத அறிஞருமான ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிஜி எடுத்த முன்னெடுப்பால் கட்டப்பட்டது. இது வட அமெரிக்காவில் மிக முக்கியமான இடமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார்.
ஹெலிகாப்டரில் மாலை: இந்தியச் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15இல் இந்த சிலை திறப்பு விழா தொடங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த விழா ஆகஸ்ட் 18ம் தேதி பிரம்மாண்டமான பிரான் பிரதிஷ்டை விழாவுடன் நிறைவடைந்தது. இந்த விழாவின் போது அனுமன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி, புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், சுமார் 72 அடி நீள மாலையும் அனுமனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. அப்போது அங்குத் திரண்டு இருந்த பக்தர்கள் ஸ்ரீராமர் மற்றும் அனுமன் நாமங்களைக் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications