Donald Trump: தோற்றுப் போய்ட்டாங்க.. ஈரானுக்கு இனிமேல்தான் இருக்கு! கடுமையாக எச்சரித்த டிரம்ப்
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் தோற்றுப்போன நாடு ஈரான் என்றும் அந்த நாடு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அண்டை நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்ட நிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதலை தொடர்ந்தது. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல், அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடுமையாக எச்சரித்த டிரம்ப்
இந்த சூழலில் தான் மத்திய கிழக்கில் தோற்றுப்போன நாடு ஈரான் என்றும் அந்த நாடு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- "நரகமாக தாக்கப்பட்டு கொண்டிருக்கும் ஈரான் தற்போது தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இனி அவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. இந்த உறுதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே ஏற்பட்டது.
மத்திய கிழக்கை முழுமையாக கைப்பற்றி ஆட்சி செய்யவே ஈரான் முயன்றது. மத்திய கிழக்கின் ஆதிக்கம் செலுத்தி வந்த ஈரான் இப்போது அந்த நிலையை இழந்துவிட்டது. மத்திய கிழக்கின் தோல்வியடைந்த நாடாக ஈரான் தற்போது மாறிவிட்டது. அவர்கள் சரணடையும்வரை அல்லது முற்றிலும் சிதறி சின்னாபின்னமாகும் வரை பல தசாப்தங்கள் இப்படித்தான் இருக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா தயாராக உள்ளது
முன்னதாக நேற்று டிரம்ப் கூறுகையில், ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும். மோதலை முடிவுக்கு கொண்டு வர இது ஒன்றே வழி. ஈரான் இணங்கி வந்து புதிய தலமையை நிறுவினால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் உறுதி அளித்தார்.
முன்னதாக ஈரான் மசூத் பெசேஷ்கியான் அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது அவர், ''எங்களால் தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என நினைக்கிறேன். இதனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாங்கள் ஒருபோதும் அண்டை நாடுகளை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை.
அமைதியையே நாங்க விரும்புகிறோம்
அமைதியையும், பிராந்திய ஒற்றுமையையும் தான் நாங்கள் விரும்புகிறோம். அந்த நாடுகளிலிருந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் தொடங்கினால் மட்டுமே நாம் பதிலடி கொடுப்போம்; இல்லையெனில் அவர்கள்மீது ஏவுகணை அல்லது தாக்குதல் நடத்தமாட்டோம்," என்று கூறியிருந்தார். இதையடுத்தே டிரம்ப் மேற்கண்ட கருத்தை கூறினார்.
ஈரான் அதிபர் மன்னிப்பு கோரிய சில மணி நேரத்தில் ஈரான் நீதித்துறை தலைவர் அதற்கு நேர்மாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், 'பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் நிலப்பரப்புகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எங்கள் எதிரிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.எனவே, இந்த இலக்குகளை நோக்கி நடத்தப்படும் கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.
தொடர்ந்து நீடிக்கும் தாக்குதல்கள்
இதைத்தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் அலை அலையாக நடத்தப்பட்டு வருகின்றன. டொனால்டு டிரம்ப் எச்சரித்து இருந்த போதும், சரண் அடையும் வாய்ப்புக்கே இடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஈரானின் தாக்குதல் அதிகரித்து இருப்பதால், இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் வான் தாக்குதலுக்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. சில இடங்களில் வெடிச்சத்தமும் கேட்டது. கத்தார் தலைநகர் தோஹாவிலும் இதே நிலை நீடித்தது.












Click it and Unblock the Notifications