முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? புதினிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப்.. ஹங்கேரியில் சந்திக்க முடிவு
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் 4வது ஆண்டை நெருங்கி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போராடி வருகிறார். இந்நிலையில் தான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரும் ஹங்கேரி நாட்டில் சந்தித்து பேச முடிவு செய்தனர். இதனால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த போர் தொடங்கியது. 4வது ஆண்டை போர் நெருங்கி வருகிறது. இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

இதுதொடர்பாக டிரம்ப் மற்றும் அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அவரது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் இன்னும் போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் தான் நாளை டொனால்ட் டிரம்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேச உள்ளார். அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் விவாதிக்க உள்ளனர்.
இப்படியான சூழலில் தான் இன்று டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி டிரம்ப் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அடுத்த வாரம் டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதின், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பு ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி டிரம்ப் - புதின் ஆகியோர் பேச உள்ளனர். இருவரும் ஏற்கனவே அமெரிக்காவின் அலஸ்காவில் ஆகஸ்ட் 15ம் தேதி சந்தித்து முதற்கட்டமாக பேசியிருந்தனர். இப்போது 2 வது முறையாக இருவரும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இதனால் இந்த சந்திப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தினார். இஸ்ரேல் சார்பில் அமெரிக்காவும், காசா சார்பில் கத்தார், எகிப்து நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த காசா - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு அடுத்தக்கட்டமாக தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை டிரம்ப் நிறுத்துகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications