ஏலியன் இருக்கா இல்லையா? வெளியாகும் அமெரிக்காவின் சீக்ரெட் டாக்குமென்ட்! டிரம்ப் மிக முக்கிய உத்தரவு
வாஷிங்டன்: ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி உலகெங்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த மெகா கேள்விக்கு இப்போது நமக்கு விடை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏலியன்கள் தொடர்பான அனைத்து ரகசிய டாக்குமென்டுகளையும் பொதுவெளியில் வெளியிடுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்காது.. வேறு கிரகங்களிலும் உயிர்கள் இருக்கலாம் என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இருப்பினும், ஏலியன்கள் இருப்பு தொடர்பாக உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. பல தரப்பும் இது குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்வதால் இதில் சஸ்பென்ஸ் தான் தொடர்கிறது.

ஏலியன்கள்
இதற்கிடையே இந்த கேள்விக்கு ஒரு வழியாக நமக்கு விடை கிடைக்கப் போவதாகத் தெரிகிறது. வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFOs) தொடர்பான அரசு டாக்குமென்ட்களை பொதுவெளியில் வெளியிடுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் பலரும் இந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் எனச் சுமார் 10 ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தான் அதிபர் டிரம்ப் அது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் உத்தரவு
தனது உத்தரவு குறித்து டிரம்ப் ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "மக்கள் மிகப் பெரியளவில் ஆர்வம் காட்டியதால், வேற்றுக்கிரகவாசிகள், வேற்றுலக வாழ்க்கை, அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள், மற்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான அரசு டாக்குமென்டுகளை அடையாளம் கண்டு வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். போர் விவகாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் மற்றும் முகமைகளுக்கு இது தொடர்பாக உத்தரவைப் பிறப்பித்துள்ளேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஏலியன்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா என்பது குறித்து டிரம்ப் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த டாக்குமென்ட்களில் ஏலியன் தொடர்பாக மிகவும் சிக்கலான மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான தகவல்கள் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் முன்னாள் அதிபர் ஒபாமா தேவையில்லாமல் ஏலியன்கள் தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
ஒபாமா
அதாவது சமீபத்தில் ஒபாமா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ஏலியன் தொடர்பாகவும் ஏலியன் 51 தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. ஏலியன்கள் இருப்பை ஒப்புக்கொண்ட ஒபாமா, சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, "ஏலியன்கள் உண்மைதான்.. ஆனால் நான் அவற்றைப் பார்க்கவில்லை! மேலும் அவை ஏரியா 51ல் வைத்திருக்கப்படவில்லை" என்றார்.
ஏரியா 51
ஏரியா 51 என்பது அமெரிக்காவில் நெவாடா என்ற பகுதியில் அமைந்துள்ள ராணுவ மையமாகும். உலகிலேயே மிகத் தீவிரமாகப் பாதுகாக்கப்படும் ராணுவ பகுதி தான் இந்த ஏரியா 51. இந்தப் பகுதியில் தான் அமெரிக்கா ஏலியன்கள் பிடித்து வைத்திருப்பதாகப் பல காலமாகவே சொல்லப்பட்டது. இப்படியொரு இடம் இருப்பதையே அமெரிக்கா பல காலம் ஒப்புக்கொள்ளவில்லை. பிரஷர் அதிகரித்ததால் இறுதியில் 2013ல் தான் இந்த இடம் இருப்பதையே அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், உள்ளே என்ன இருக்கிறது, என்ன ஆய்வு நடக்கிறது என்பது குறித்து எந்தவொரு தகவலையும் ராணுவம் பகிரவில்லை.
இது தொடர்பாகவே ஒபாமா அது போலப் பதிலளித்திருந்தார். ஒபாமாவின் பதிலை விமர்சித்த டிரம்ப், ஒபாமா ரகசியத் தகவல்களை வெளியிட்டுவிட்டதாகவும் அவர் அதைச் செய்திருக்கக் கூடாது என்றும் பதிலளித்தார். ஒபாமாவின் கருத்துக்களில் எது ரகசியமானது என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அவர் ஒரு பெரிய தவறு செய்தார் என்று மட்டும் கூறிவந்தார்.












Click it and Unblock the Notifications