"கடவுள் என் பக்கம் இருக்கிறார்.." துப்பாக்கி சூடு சம்பவம்.. நொடியில் தப்பியது எப்படி.. டிரம்ப் பரபர
வாஷிங்டன்: கடந்த வாரம் நடந்த கொலை முயற்சி சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாகப் பொதுமக்களிடையே பேசிய டிரம்ப், இறைவன் ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் இதன் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடந்த போதிலும் உயிர் தப்ப முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் என்ன நடந்தது என்பதையும் அவர் விவரித்தார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே கடந்த வாரம் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த துப்பாக்கிக் குண்டு அவரது காதை மட்டும் உரசிச் சென்றதால், அவர் உயிர் பிழைத்தார்.
டிரம்ப்: இதற்கிடையே இந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த வாரம் தன் மீது நடந்த கொலை முயற்சி குறித்து விவரித்தார். கடவுள் தன் பக்கம் இருப்பதாகத் தெரிவித்த அவர், தாக்குதலின் போது தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் தான் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அதை முறைப்படி ஏற்றுக் கொண்ட டிரம்ப், பென்சில்வேனியாவில் தனது பேரணியில் எப்படித் தாக்குதல் நடந்தது என்பதை அவர் விவரித்தார். குடியரசு கட்சி தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், "இன்று இரவு நான் உங்கள் முன்பு நின்றிருக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் மட்டுமே நான் இந்த அரங்கில் உங்கள் முன் நிற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப் மட்டுமின்றி பலரும் இந்த சம்பவத்தைத் தெய்வீக தலையீடு என்றே குறிப்பிட்டுள்ளனர். மேடையில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப், சரியாகத் துப்பாக்கி தன்னை நோக்கி வரும் போது தலையைத் திருப்பியுள்ளார். இதன் காரணமாகவே துப்பாக்கிக் குண்டு அவரது காதை உரசிச் சென்றது. இல்லையென்றால் அது நேராக அவரது தலையில் பாய்ந்து இருக்கும்.
அந்த ஒரு செயல்: தொடர்ந்து இந்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "சட்ட விரோத குடியேற்றம் குறித்த டேட்டாவை காட்ட நான் சற்று முன்னோக்கிச் சாய்ந்தேன்.. இதன் காரணமாகவே புல்லட் என் மீது படாமல் உரசி மட்டும் சென்றது. சரியான நேரத்தில் நான் தலையைத் திருப்பியது எனது அதிர்ஷ்டம். கடைசி நொடியில் நான் என் தலையை அசைக்காமல் இருந்திருந்தால், அந்த தோட்டா என்னைத் தாக்கி இருக்கும்.. இப்போது என்னால் உங்கள் முன்பு நின்றிருக்க முடியாது.
முதலில் பலத்த சத்தம் கேட்டது. அதன் பிறகு என் வலது காதில் ஏதோ ஒன்று என்னை மிகவும் கடுமையாகத் தாக்கியது போல இருந்தது.. அது துப்பாக்கி குண்டாக மட்டுமே இருக்க முடியும் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். நான் எனது கையை வைத்துத் தொட்டுப் பார்த்தேன். கை முழுக்க ரத்த கறை படிந்தது. ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. இருப்பினும், அப்போதும் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்.. ஏனென்றால் கடவுள் என் பக்கம் இருந்தார்" என்று அவர் தெரிவித்தார்.
கைது: இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தியவர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications