சீனா, கனடாவை தொடர்ந்து இனி இவுங்கதான் டார்கெட்.. சூட்டோடு சூடாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது வரி விதிக்க போவதாக கூறியுள்ளார். இந்த பேச்சு தொடர்பாக உடனே ரியாக்ட் செய்த ஐரோப்பிய யூனியன், கடுமையாக பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளது. ஏற்கனவே பிரிக்ஸ் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்போவதாக டொனால்டு டிரம்ப் எச்சரித்து உள்ளதால், சர்வதேச அளவில் வர்த்தக போர் மூளும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்துவதாக உத்தரவிட்டார். அதேபோல, ரஷ்யாவுக்கும் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

உக்ரைன் உடனான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்தார். இதையடுத்து, "பிரிக்ஸ் நாடுகள் புதிய கரன்சியை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தை ஆதரிக்கவோ முடிவு செய்தால் அந்த நாடுகள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என எச்சரித்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் இருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு இடையே, சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகளுக்கும் புதிதாக வரியை விதித்தார். சீனாவிற்கு 10 சதவிகிதமும் கனடா, மெக்சிகோவிற்கு 25 சதவிகிதமும் வரி விதித்தார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த கனடா அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதித்தது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், "155 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்" என்றார்.
டிரம்பின் முதல் பதவி காலத்தில் அவர் சீன பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தார். இதனால், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. தற்போது, கனடா மற்றும் மெக்சிகோவுக்கு டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், அந்த நாடுகளும் பதிலுக்கு வரி விதிப்பை அறிவித்துள்ளன. இதனல் வரி போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இனி ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது வரி விதிக்க போவதாக டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "யூரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். நான் எப்போது என்ற டைம்லைனை சொல்ல மாட்டேன். ஆனால், விரைவில் நடக்கும்" என்றார்.
டிரம்பின் இந்த பேச்சு தொடர்பாக ரியாக்ட் செய்த ஐரோப்பிய யூனியன், 'கடுமையாக பதிலடி கொடுப்போம்' என்று கூறியது. இது தவிர பிரிக்ஸ் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளதால், சர்வதேச அளவில் வர்த்தக போர் மூளும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications