"இதுவே அமெரிக்கர்கள் வாக்களிக்கும் கடைசி தேர்தல்.." டிரம்ப் பகீர் பேச்சு.. கிளம்பிய எதிர்ப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், இதுவே வாக்களிக்க வேண்டிய கடைசி தேர்தலாக இருக்கும் எனப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. அவர் சர்வாதிகாரத்திற்கு நாட்டை தள்ளப் போவதையே இது காட்டுவதாக ஜனநாயக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியில் இருந்து பைடன் போட்டியிட இருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்பு அதிகரித்தால் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.

அவருக்குப் பதிலாகக் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் அங்கே தீவிரமாக நடந்து வருகிறது.
டிரம்ப் பேச்சு: இதற்கிடையே டிரம்ப் சமீபத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பேச்சு தான் இப்போது பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது இந்த அதிபர் தேர்தலில் கிறிஸ்தவர்கள் தனக்கு வாக்களித்தால், மீண்டும் வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேவையான அனைத்தையும் அடுத்த 4 ஆண்டுகளில் செய்துவிடுவேன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஒரு முறை வாக்களித்தால் போதும்: டர்னிங் பாயிண்ட் ஆக்ஷன் என்ற பழமைவாதக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார். கிறிஸ்தவர்கள் அதிகம் இருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "கிறிஸ்தவர்களே, நீங்கள் இந்த முறை உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்.. இந்த ஒரு முறை வாக்களித்தால் போதும்.. மீண்டும் வாக்களிக்கத் தேவை இருக்காது.
இன்னும் நான்கு வருடங்கள் போதும்.. எல்லா பிரச்சினையும் சரியாகும். அது உங்களுக்கே தெரியும்.. எல்லா பிரச்சினையும் சரியாகும் என்பதால் இனி வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்படாது. என் அருமை கிறிஸ்தவர்களே.. எனக்கு உங்கள் முக்கியத்துவம் புரிகிறது.. தேர்தல் நாளில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.. ஒரு முறை வாக்களித்தால் போதும் மீண்டும் வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது" என்று அவர் பேசினார்.
கிளம்பிய எதிர்ப்பு: டிரம்ப் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று பலருக்கும் தெளிவாகப் புரியவில்லை. ஒரு தரப்பினர் அமெரிக்காவை டிரம்ப் சர்வாதிகாரத்திற்குத் தள்ளப் போகிறார். அதைக் குறிப்பிடும் வகையிலேயே இப்படிப் பேசி இருக்கிறார் என்கிறார்கள்.. அதேநேரம் இதை மறுக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள், நாட்டிற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அடுத்த 4 ஆண்டுகளில் செய்துவிடுவேன் என்பதே டிரம்பின் கருத்து என்றும் அதை ஆளும் தரப்பு திரித்துப் பரப்பி வருவதாகச் சாடியுள்ளனர்.
கமலா ஹாரிஸ் தரப்பு இந்த குறிப்பிட்ட பேச்சுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், டிரம்பின் பேச்சு வினோதமானதாக இருப்பதாகவும் அவர் ஏதோ பழமைவாத செயலை செய்யப் போகிறார் என்பதையே இது காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் டிரம்ப் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக ஒரு பிரச்சார கூட்டத்தில், "நவம்பரில் நடக்கும் தேர்தலில் நான் வென்று அதிபரானால் மெக்சிகோவுடனான தெற்கு எல்லையை மூடிவிடுவேன்.. இதற்கு நான் சர்வாதிகாரியாக மாறவும் ரெடியாக இருப்பேன்" என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அது வெறும் ஜோக் என விளக்கமளித்தார். இந்தச் சூழலில் தான் சர்வாதிகாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கிட்டதட்ட அதே கருத்தை டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகி நிலையில், கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். இதனால் அங்கே போட்டி அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கே பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications