ஈரான் பேரழிவை சந்திக்கும்.. இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் கொடுத்த பெரிய வார்னிங்.. மீண்டும் பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் பேரழிவை சந்திக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் அவர் இப்படி எச்சரித்துள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.

இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது வரை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. இருநாடுகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொள்ளாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டி உள்ளார்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ‛‛ஈரான் எங்களுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். ஏனெ்னறால் தற்போதைய சூழலில் ஓர் ஒப்பந்தம் மிக அவசியம் தேவையாக உள்ளது. இல்லாவிட்டால் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். இது ஈரானுக்கு மிகவும் வேதனையை அளிக்கும். அத்தகைய சம்பவத்தை செய்யநான் விரும்பவில்லை. அவர்கள் ஒப்பந்தம் செய்ய மறுத்தால் நிலைமை முற்றிலுமாக மாறிவிடும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது'' என்றார்.
அமெரிக்காவை போல் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்டகாலமாக பகை உள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஈரான் கடுமையாக மோதிக்கொண்டன. இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து போர் விமானங்கள் மூலமாக குண்டுமழை பொழிந்தது. அதோடு இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய கிழக்கு பிராந்திய நிலவரம் பற்றி இருவரும் விவாதித்தனர். ஈரானால் இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அணுசக்தி திட்டம் மட்டுமல்லாமல், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் செயல்படும் மறைமுக ஆதரவுக் குழுக்களுக்கு வழங்கும் ஆதரவுக்கும் செக் வைக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று டிரம்பிடம், நெதன்யாகு கூறியிருந்தார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள் மட்டுமின்றி ஈரானுக்கு பகையாளியாக உள்ளன. இப்படியான சூழலில் டிரம்ப் - நெதன்யாகு ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு அணுஆயுத ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் பேரழிவை சந்திக்கும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளது மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications