நாளைக்கு என்ன நடக்கும்னே தெரியாது.. பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்.. என்ன செய்யப் போகிறது ஹமாஸ்
வாஷிங்டன்: சனிக்கிழமை பிற்பகலுக்குள் (அமெரிக்க நேரப்படி) ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது என மீண்டும் மிரட்டி பேசியிருக்கிறார் டிரம்ப். ஹமாஸ் அமைப்பு டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், டிரம்ப் விதித்த கெடு இன்னும் சில மணி நேரங்களில் முடிய உள்ளதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கோண்டு வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கும் அதே அளவு வரி விதித்து வருகிறார். சர்வதேச அளவில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் எனக் கூறி வரும டிரம்ப், உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல டிரம்ப் பதவியேற்ற சூழலில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயும் 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை விடுவிப்பது எனவும் மாறாக பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவும் உடன்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே சனிக்கிழமைக்குள் அனைத்து பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ள டிரம்ப், இது தொடர்பாக கத்தார் மன்னரிடமும் பேசியுள்ளார்.
இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ராணுவம் மீறி பாலஸ்தீனர்களை கொல்வதாகவும் மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்துவதாகவும் ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இதனால், 'மறு அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் கூறியது. இது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படவில்லை என்றால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார். எனினும், டிரம்பின் இந்த வேண்டுகோளை ஹமாஸ் நிராகரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிக்கையில் வெள்ளிக்கிழமை (அமெரிக்க நேரப்படி) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், சனிக்கிழமை பிற்பகல் என்ன நடக்கப் போகிறது என்று எனக்கே தெரியாது. இது என் முடிவை பொறுத்தது. நான் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பேன். இஸ்ரேல் என்ன செய்யப்போகிறது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.
மேலும் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்ட பிணைக்கைதிகள் குறித்து பேசிய டிரம்ப், காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக்கைதிகள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் அவர்களை ஹமாஸ் மிக மோசமாக நடத்தியதாகவும் கூறியிருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து 251 பேரை ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை தரவுகளின் படி இன்னும் 73 பிணைக்கைதிகள் காசாவில் உள்ளனர். 35 பேர் உயிரிழந்து விட்டனர். அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே டிரம்பின் விருப்பமாக உள்ளது. எனவே, சனிக்கிழமை பிற்பகல் 12 மணி வரை கெடு விதித்து இருக்கிறார். காச சுகாதாரத்துறை அமைச்சகம் கூறிய தகவலின்படி இஸ்ரேல் - ஹமாஸ் போரால் இதுவரை 48 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications