மாண்புமிகு அமைச்சர் எலான் அவர்களே..கொக்கி போட்ட ட்ரம்ப்! உடனே ஓகே சொல்லிட்டாரே.. அதிபர் தேர்தல் கலகல
வாஷிங்டன்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கை அமைச்சராக நியமிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் கூற, மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பதாக எலான் மஸ்க்கும் பதில் அளித்து இருக்கிறார்.
ஒரு நாட்டின் தேர்தல் என்றாலும் உலக அளவில் பெரிய பரபரப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியது அமெரிக்க அதிபர் தேர்தல். பல நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தும் நபராக அமெரிக்க அதிபர்கள் இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தற்போது ஆளும் ஜோ பைடன் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் தேர்தலில் இருந்து விலகிக் கொண்ட நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இறங்கி இருக்கிறார்.
ஏற்கனவே கமலா ஹாரிஸ் சிக்காகோவில் நடந்த மாநாட்டில் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு கட்சியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் அவர் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது, வாஷிங்டன் போஸ்ட், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றன.
அதில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீத ஆதரவும் டொனால்ட் டிரம்புக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அவருக்கு அது அனுதாப அலையாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் மிகக் கடுமையாக போட்டியளிக்கிறார். சொல்லப் போனால் முன்னணியில் இருக்கிறார் என்று கூறலாம்.
கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவும் ட்ரம்புக்கு 43 சதவீத ஆதரவு இருந்தது. அப்போதைய போட்டியாளராக கருதப்பட்ட பைடனுக்கு 42 சதவீத ஆதரவை மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலில் யாருக்கு யார் ஆதரவு என்பது குறித்து மிகப்பெரும் பணக்காரர்கள் உலகத் தலைவர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் டொனால்ட் டிரம்பிற்கு ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைத்தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆதரவளித்து வருகிறார்.
தொடர்ந்து அவரது பதிவுகள் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவளிப்பது போலவே இருக்கிறது. இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது" நீங்கள் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு ஆட்சியில் பதவி வழங்குவீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டொனால்ட்,"நிச்சயம் நான் மறுபடியும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு திரும்பவேன். என்னுடைய நிர்வாகத்தில் பங்கேற்க எலான் மஸ்க் தயாராக இருந்தால் அமைச்சரவை உறுப்பினர் அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன். அதுமட்டுமல்ல ஏற்கனவே எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7500 அமெரிக்க டாலர் வரி சலுகையை நீக்குவது குறித்தும் சிந்திப்பேன்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஆட்சியில் பங்கேற்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார் எலான் மஸ்க். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் டிபார்ட்மென்ட் ஆஃப் கவர்மெண்ட் எஃபீசியன்சி என ஏஐ போட்டோ ஒன்றை பதிவிட்டு இருக்கும் அவர், நான் சேவை செய்ய தயாராக இருக்கிறேன் என கூறி இருக்கிறார். இருவரும் விளையாட்டாக சொன்னார்களா அல்லது வினையாக சொன்னார்களா? என போக போக தான் தெரியும்.












Click it and Unblock the Notifications