ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடிவிட தானாகவே முன்வந்த நிறுவனர் நாதன் ஆண்டர்சன்! பின்னணி இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவரே அறிவித்துள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல் என்பது எதைக் குறிக்கிறது.. எதற்காக திடீரென ஹிண்டன்பர்க் மூடப்பட்டது என்பது குறித்து வல்லுநர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2017ம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவரால் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

நிகோலா கார்ப்பரேஷன் மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள், மோசடி அல்லது முறையற்ற நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கூறி பரபர ரிப்போர்ட்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பேசுபொருளானது தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுகிறது:
சில தனிப்பட்ட காரணங்களைச் சொல்லி, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லவே நிறுவனத்தை மூடும் முடிவை எடுத்துள்ளதாக நாதன் ஆண்டர்சன் இது தொடர்பான தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அடுத்து அமையும் டிரம்ப் நிர்வாகம் சர்வதேச சந்தைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் நிதி நிறுவனங்கள் குறித்து ஆராயும் என்றும் சில ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலேயே தனது நிறுவனத்தை மூட நாதன் முடிவெடுத்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
விமர்சனம்:
மேலும், பல வல்லுநர்கள் இந்த ஹிண்டன்பேர்க் ஆராய்ச்சி நிறுவனம் கிட்டதட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற அமைப்பைப் போலச் செயல்படுவதாகக் கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டி இருந்தனர். புவிசார் அரசியலுக்காக இதுபோன்ற ரிப்போர்ட்களை வெளியிடுவதாகவும் இதன் பின்னணியில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சோரோஸ் போன்றவர்கள் இருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். சுயமாகச் செயல்படும் விசாரணை என்று சொல்லிக் கொண்டு, வெளிநாட்டுப் பொருளாதாரத்தில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்த இதுபோன்ற நிறுவனங்கள் மூலம் பைடன் நிர்வாகம் முயன்றதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஏனென்றால், ஹிண்டன்பேர்க்கின் ரிப்போர்ட்கள் திடீரென வெளியாகி பங்குச்சந்தையை மிகக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதைத்து, சிக்கலான புவிசார் அரசியல் உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிப்போர்ட் வெளியான நேரம்:
உதாரணமாக அதானி குழுமம் பற்றிய ஹிரண்டன்பர்க் ரிப்போர்ட் சரியாகத் தெற்காசியாவில் இந்தியாவுக்கு புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்தபோது வெளியானது. மேலும், இது இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்திற்கு குறிப்பிடத்தக்க அளவுக்குப் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தியது. இதுபோல பதற்றம் நிலவும் போது இதன் ரிப்போர்ட்கள் வெளியாவது வெறும் தற்செயலானதா அல்லது குறிப்பிட்ட பொருளாதாரங்களைச் சீர்குலைக்க வெளியிடப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.
தெற்காசியாவில் முக்கிய நாடாக உள்ள இந்தியா, அதன் செல்வாக்கை உலகெங்கும் விரிவுபடுத்தும் முக்கியமான கட்டத்தில் இந்த ரிப்போர்ட் தேவையற்ற சிக்கலையே உருவாக்கியது.
புதிய டிரம்ப் அரசு:
அமெரிக்காவில் இப்போது அமையும் புதிய அரசு, பொருளாதாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்கும் நிதி நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தக்கூடும் என்று தகவல் வெளியாகி வருகிறது. அடுத்து அமையும் டிரம்ப் நிர்வாகம், நிதி மோசடி ரிப்போர்ட் எனச் சொல்லிக்கொண்டு சர்வதேச சந்தைகளைப் பாதிக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும், விசாரணையைத் தீவிரப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் முன்கூடியே மூடப்படுவதன் மூலம் ஹிண்டன்பேர்க் நிறுவனம் சட்டச் சிக்கல் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கையில் இருந்து தப்ப முயல்கிறது. மேலும் அதன் முதலீடு, செயல்பாடுகள் மற்றும் அரசியல்வாதிகளுடனான தொடர்புகள் ஆகியவை குறித்த தகவல்களையும் மறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
மக்கள் சொல்வது என்ன:
பொதுவெளியில் ஹிண்டன்பர்க்கின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரவே இருந்துள்ளன. ஒரு சிலர் மாபெரும் கார்ப்பரேட்களை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி இருப்பதாகப் பாராட்டுகிறார்கள். அதேநேரம் மறுபுறம் ஹார்ட் செல்லிங் உள்ளிட்ட அதன் யுக்திகளும் செயல்பாடுகளும் வளர்ந்து வரும் சந்தைகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஹிண்டன்பர்க் திடீரென மூடப்பட்டுள்ள சூழலில், அதன் பின்னணியில் யார் இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஹிண்டன்பேர்க் மூடப்படுவது இந்த விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவாது.. மாறாக எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் வேறு விதத்தில் நடத்தப்படலாம் என்பதை காட்டும் சிக்னலாகவே இருக்கிறது.
சந்தேகம்:
நிறுவனத்தை மூடுவது தொடர்பான அறிவிப்பில் நாதன் ஆண்டர்சன் தனது நிறுவனம் எப்படிச் செயல்பட்டது என்பது குறித்த ப்ளூ பிரிண்டை வெளியிடவுள்ளதாகவும் இது வரும் காலத்தில் மற்ற நிறுவனங்களுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அவர் என்னதான் இதையெல்லாம் செய்தாலும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பாதிப்பை அவர்கள் சீர்குலைக்க முயன்றனரா என்ற சந்தேகம் ஆழமாக இருக்கவே செய்கிறது.
சர்ச்சைக்குரிய நிறுவனங்களில் ஒன்று:
ஹிண்டன்பர்க் ரிசர்ச் மூடப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தைகள் இதனால் உயர்ந்து வருகிறது. அதேநேரம் இப்போது அமெரிக்காவில் அமையும் புதிய நிர்வாகம் இதுபோல இயங்கும் மற்ற நிதி நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது.. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மூடல் என்பது நிதி வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய நிறுவனங்களில் ஒன்றின் சகாப்தத்தின் முடிவுக்கு வருவதைக் காட்டுவது மட்டுமின்றி, புவிசார் அரசியலுக்கு நிதி அமைப்புகள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கூட காட்டுவதாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications