உலகை புரட்டி போடும் கண்டுபிடிப்பு.. "காற்றில் இருந்து மின்சாரம்.." வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: காற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அட்டகாசமான ஒரு வழிமுறையை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.
மனித சமூகத்தை ஒவ்வொரு காலத்திற்கும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்போதுமே அறிவியல் தான். அறிவியல் ஆய்வுகளில் கிடைக்கும் விஷயங்களே நாம் இந்தளவுக்கு வளர காரணமாக இருக்கிறது.

இப்போது உலகில் அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படைத் தேவையாக மின்சாரம் மாறி இருக்கிறது. கார்கள் முதல் வீட்டில் இருக்கும் அடுப்புகளை வரை அனைத்தும் மின்சாரத்தில் பயன்படுத்தும் வகையில் வந்துவிட்டன.
மின்சாரம்: எனவே, மின்சார உற்பத்தியும் அந்தளவுக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும், இப்போது பெரும்பகுதி மின்சாரம் நிலக்கரியில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், அதிகப்படியான காற்று மாசு ஏற்படவே செய்கிறது. நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதைக் குறைத்து, மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை குறித்து ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்படி தூய்மையான ஆற்றலைச் சூரிய சக்தி, காற்றாலை ஆகியவை மூலம் பெறுவது குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது. இதற்கிடையே இப்போது மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்திப் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர்.
கருவி: காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து தொடர்ந்து மின்சாரத்தைச் சேகரிக்கும் இந்த கருவியை மிக எளிதாக உருவாக்கலாம் என்றும் இதன் மூலம் மின் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் 100 நானோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட நானோபோர்களைக் கொண்ட பொருள் மூலமே அவர்கள் இதை சாத்தியமாக்கியுள்ளனர்.
இது குறித்து யுமாஸ் ஆம்ஹெர்ஸ்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவரும் இதை உருவாக்கியவர்களில் ஒருவருமான சியாவோமெங் லியு கூறுகையில், "இது மிகவும் உற்சாகம் தருகிறது.. காற்றில் இருந்து சுத்தமான மின்சாரத்தை அறுவடை செய்யும் மிகப் பெரிய கதவை நாங்கள் திறந்துள்ளோம். இனி இதே துறையில் பல புதிய கருவிகள் வரும் என்பதில் சந்தேகமே இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
மேகம்: இது குறித்து மற்றொரு ஆய்வாளர் ஜுன் யாவ் கூறுகையில், "காற்றில் நாம் நினைப்பதைக் காட்டிலும் அபரிமிதமான அளவு மின்சாரம் உள்ளது.. ஒரு மேகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.. மேகம் என்பது நீர்த் துளிகளைக் கொண்ட ஒன்று தான். அந்த அனைத்து துளிகளிலும் மின்னோட்டம் இருக்கும். இதன் காரணமாகவே அதில் இருந்து மின்னல் உருவாகிறது. அந்த மின்னலில் அபரிவிதமான மின்சாரம் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் மின்சாரம் எப்போது எங்கே தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதனால் நம்மால் மின்னலில் வெளிப்படும் மின்சாரத்தைச் சேகரிக்க முடியாது. அதற்குப் பதிலாகவே இந்த வழியை உருவாக்கியுள்ளோம்.. அதாவது சிறிய அளவிலான மேகம் போன்ற ஒன்றை உருவாக்கி அதில் இருந்து மின்சாரத்தை உருவாக்குகிறோம்" என்றார்.
அதாவது இவர்கள் சிறிய மேகம் போன்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். அது காற்றில் இருக்கும் மின்சாரத்தைப் பிடிக்குமாம். காற்றில் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதால், இந்த கருவி மூலம் எல்லையற்ற மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications