எலான் மஸ்க்கை பகைத்தால் பதவி பறிப்பு.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் டிரம்ப் சொன்ன வார்த்தை.. பின்னணி
வாஷிங்டன்: ‛‛எலான் மஸ்க்கை பகைத்தால் அவர்களின் பதவி என்பது பறிக்கப்படும்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல்
அமைச்சரவை கூட்டத்தில் பேசியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இவருக்கு பக்கப்பலமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கினார். தேர்தல் பிரசார மேடைகளில் டொனால்ட் டிரம்புடன் பங்கேற்றார். இதற்கு கைமாறாக டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். எலான் மஸ்க்கிற்காக புதிதாக DOGE என்ற பிரிவை டொனால்ட் டிரம்ப் உருவாக்கினார். Department of Government Efficiency ( தமிழில்
அமெரிக்காவின் செயல்திறன் துறை) என்ற துறையின் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த துறையின் என்பது அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொள்வதாகும். தேவையில்லாத செலவை குறைப்பதை நோக்கமாக வைத்து செயல்படும்.
எலான் மஸ்க் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் தான் அமெரிக்கா சார்பில் USIAD மூலம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் பல ஆயிரம் கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது USAID என்பது செயல்படாத நிலையில் உள்ளது. இதுதவிர பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர்களை எலான் மஸ்க் பரிந்துரையில் டொனால்ட் டிரம்ப் நீக்கி வருகிறார்.
இதனால் அதிபர் டொனால்ட் டிரம்பை போல் எலான் மஸ்க்கும் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் எலான் மஸ்க்கும் பங்கேற்றார். இது பலருக்கும் வியப்பாக இருந்தது. எலான் மஸ்க் இப்போது அமெரிக்காவில் அமைச்சராக இல்லாத நிலையில் DOGE தலைவராக பங்கேற்று இருந்தார்.
டொனால்ட் டிரம்ப் இந்த கூட்டத்தில் ‛மேக் அமெரிக்கா கிரேட் அகெயின்' என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருந்த பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்தார். இந்த கூட்டத்தில் எலான் மஸ்க் பற்றி டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது அவர், ‛‛எலான் மஸ்க்கால் யாராவது மகிழ்ச்சியின்றி இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார். அதனை கேட்டவுடன் மற்றவர்கள் அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி சிரித்தனர்.
அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛ எலான் மஸ்க்கால் சிலர் உடன்படவில்லை. இருப்பினும் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்று கூறினார். மேலும் ‛‛யாராவது எலான் மஸ்க் செயல்பாட்டுக்கு உடன்படாமல் இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவர்களின் பதவியில் இருந்து விரட்டுவோம்'' என்றார். இதனை டொனால்ட் டிரம்ப் சீரியஸாக கூறவில்லை. சிரித்தபடி ஜோக்காக கூறினார்.
இந்த கூட்டத்தில் எலான் மஸ்க் பேசினார். அப்போது, ‛‛எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது. கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறேன் நான் இந்த பணியை செய்யாவிட்டால், அமெரிக்கா பொருளாதார சிக்கலில் சிக்கிவிடும்'' என்று கூறினார். எலான்மஸ்க்கிற்கு ஆதரவாக டொனால்ட் டிரம்ப் இப்படி பேசியிருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில், ‛‛அனைத்து கேபினட் உறுப்பினர்களும் எலான் மஸ்க்கின் செயல்பாட்டால் ஹேப்பியாக உள்ளனர்'' என்று கூறியிருந்தார்.
மேலும் எலான் மஸ்க்கிற்கு, டிரம்ப் ஆதரவு தெரிவிப்பதன் பின்னணியில் இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அதாவது எலான் மஸ்க் நடவடிக்கையால் வெறும் 40 நாளில் அமெரிக்கா 65 பில்லியன் டாலர் நிதியை மிச்சப்படுத்தி உள்ளது. இது டொனால்ட் டிரம்பை கவர்ந்துள்ளது. இதனால் தான் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கை தன்னுடன் வைத்து கொண்டு அவரை புகழ்ந்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications