கமலா ஹாரிஸ் வென்றால் அமெரிக்கா அவ்ளோதான்.. எலான் மஸ்க் நேர்காணலில் டொனால்டு டிரம்ப் ஆவேசம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எலான் மஸ்க் உடனான நேர்காணலில் டொனால்டு டிரம்ப், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், பிரசாரத்தில் தடுமாறியதால் போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். டொனால்டு டிரம்பிற்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் டொனால்டு டிரம்பை நேர்காணல் செய்ய இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்த நேர்காணல் ஸ்கிரிப்ட் எதுவும் இல்லாமல் இருக்கும் எனவும் பயனர்கள் எந்த கேள்வியையும் கேட்கலாம் எனக் கூறியிருந்தார். இந்த நேர்காணல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், யூசர்கள் ஸ்பேசில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. DDOS எனப்படும் சைபர் அட்டாக் நடைபெற்று இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டினார்.
அதாவது, இண்டெர்னெட் டிராபிக் வழியாக சர்வரில் மொத்தமாக புகுந்து பிற யூசர்களை இணையவிடாமல் முடக்கும் ஒருவகையிலான சைபர் தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இதனால், குறைவான யூசர்கள் இணைந்த நிலையில் அரைமணி நேரம் கழித்து இந்த பேட்டி தொடங்கியது. இந்த பேட்டியின் போது டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை கடுமையாக தாக்கினார்.
டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- தற்போதே நமக்கு சரியான அதிபர் இல்லை. கமலா ஹாரிஸ் இதை விட மோசமாக இருப்பார். சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த தாராளவாதி அவர். சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா நகரத்தை அழித்துவிட்டார். எனவே, கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வு செய்யப்படால் நமது நாட்டையும் அழித்துவிடுவார். பணவீக்கத்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பேரழிவை சந்தித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க மக்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்தினார்கள். ஆனால் இன்று தங்கள் கைவசம் இருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்து கடன் வாங்கும் நிலமைக்கு அமெரிக்கர்கள் சென்று விட்டார்கள்.
சட்டவிரோதமாக ஊடுருபவர்களை கமலா ஹாரிஸ் அனுமதிக்கிறார். நாம் நினைப்பதை விட இது அதிகமாக உள்ளது. தங்கள் நாட்டில் உள்ள சிறைகளை காலி செய்யும் நாடுகள் நமது நாட்டிற்கு அவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள். அப்படி வரும் நபர்கள் இங்கு வந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நான் அதிபராக இருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications